சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது, சீனா முழுவதும் பரவி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்தது. வைரஸ் தாக்கியதாக உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய புதிய ஆஸ்பத்திரியை 10 நாட்களில் சீனா கட்டி முடித்து திறந்துள்ளது. அங்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆயிரத்து 500 படுக்கைகள் கொண்ட மற்றொரு ஆஸ்பத்திரி விரைவில் திறக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நகரங்களுக்கு சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில், முக்கிய நகரான ஷாங்காய்க்கு 175 கி.மீ. தொலைவில் உள்ள தைசூ உள்ளிட்ட நகரங்களில் நேற்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனது எதிரியாக கருதும் அமெரிக்காவிடம் சீனா உதவி கோரி உள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியதாவது:-
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு சீனாவுக்கு உதவ அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளதை நாங்கள் அறிவோம். அமெரிக்கா தனது உதவியை வெகுவிரைவில் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்கா இந்த பிரச்சினையை அமைதியாக, ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும். சீனாவை மதித்து, அதனுடன் இணைந்து செயல்பட வேண்டும். மிகைப்படுத்தி செயல்படக்கூடாது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசும், மக்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகி றோம். இந்த தடுப்பு நடவடிக்கைகள், படிப்படியாக பலனளிக்க ஆரம்பித்துள்ளன. பலர் குணமடைந்து வருகின்றனர். அதனால், இந்த போரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களது முயற்சிகளை உலக சுகாதார அமைப்பும், சர்வதேச சமூகமும் அங்கீகரித்துள்ளன என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, கொரோனா வைரசுக்கு ஹாங்காங்கில் நேற்று ஒருவர் பலியானார். 39 வயதான அவர், சீனாவின் உகான் நகருக்கு சென்று விட்டு, அங்கிருந்து கடந்த மாதம் 23-ந்தேதி ஹாங்காங் திரும்பினார். கடுமையான காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். கொரோனா வைரசுக்கு சீனாவுக்கு வெளியே உயிரிழப்பு நடந்த 2-வது நாடு, ஹாங்காங் ஆகும்.
தென்கொரிய ராணுவ வீரர்கள் 800 பேர் சமீபத்தில் சீனாவுக்கு சென்று திரும்பினர். அவர்களை தென் கொரிய அரசு, தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தோனேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், சீனர்கள் வருவதற்கு தடை விதித்துள்ளன. தங்கள் நாட்டினர் யாரும் சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.