அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்!
03 Feb,2020
அமெரிக்காவில் 8ஆவதாக மேலும் ஒரு நபருக்கு கொரானா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹூபே மாகாணத்துக்கு சென்றுவிட்டு மாசாசூசெட்ஸ் திரும்பிய அந்த நபரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. எனினும் அந்த நபரின் அடையாளம் எதுவும் அந்த மையம் வெளியிடவில்லை. அமெரிக்காவில் கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், பொது சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.
சீனாவில் அண்மையில் பயணம் செய்த வெளிநாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், ஹூபே மாகாணத்தில் கடந்த 2 வாரங்களில் பயணம் செய்துவிட்டு, அமெரிக்கா திரும்பியோர் 14 நாள்கள் தனிமை வார்டில் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருவோரில் ஆயிரம் பேரை தனிமை வார்டில் கண்காணிக்கக்கூடிய வசதிகளை செய்து உதவும்படி, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அந்நாட்டு சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் தனது ஒப்புதலை அளித்ததைத் தொடர்ந்து, கலிபோர்னியாவில் 2 இடங்களிலும், கொலராடோ, டெக்சாசில் தலா ஓரிடத்திலும் அந்த வசதிகளை ராணுவம் செய்து தரவுள்ளது