அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளைத் தனிமைப்படுத்த அரசாங்கம் திட்டம்
30 Jan,2020
சீனாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளை, கிறிஸ்மஸ் தீவில் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 1,200 மைல் தொலைவில் கிறிஸ்மஸ் தீவு உள்ளது.
ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்த சீனாவின் தேசிய மகளிர் கால்பந்து அணி அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 5 ஆம் திகதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்பத்திரண்டு பேரைக் கொண்ட மகளிர் அணி மற்றும் பணியாளர்கள் பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் தேசிய மகளிர் கால்பந்து அணி கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வுஹான் வழியாகப் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.
சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் (NHC) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே பிரான்ஸிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வுஹானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திரும்பிய ஒரு குடும்பத்திற்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரையில் 5,974 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 9,239 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனக் கருத்தப்படுகின்றது. சீனாவுக்கு அப்பால் 16 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
சார்ஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களைப் போலவே, புதிய கொரோனா வைரஸும் வயதானவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
கடுமையான சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ், ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹானில் உள்ள ஒரு மீன் சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட வனவிலங்குகளிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.
இந்த வைரஸுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை. இருப்பினும், பலர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளனர்