கிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
25 Jan,2020
கிழக்கு ஆபிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியாவில் “லோகஸ்ற்” எனப்படும் வெட்டுக்கிளிப் படையெடுப்பு பயிர்களை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.
பல தசாப்தங்களில் இல்லாத அளவில் வெட்டுக்கிளிகள் மிகப் பெரிய திரளாகப் படையெடுத்துள்ளன.
ஏற்கனவே காலநிலைப் பாதிப்புக்குள்ளான கிழக்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் பில்லியன் கணக்கான கொடூரமான பூச்சிகள் ஆக்கிரமித்துள்ளன.
“காப்பான்” படப் பாணியில் மிகவும் ஆபத்தான வெட்டுக்கிளி இனமாகக் கருதப்படும் பாலைவன வெட்டுகிளிகளின் படையெடுப்பு கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வரட்சி மற்றும் வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டுவரும் ஒரு பிராந்தியத்தில் லோகஸ்ற் பூச்சிகளின் படையெடுப்பு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் இன்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளனர்.
கென்யாவில் சுமார் 2,400 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 200 பில்லியன் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மதிப்பிட்டுள்ளது.
கென்யாவில் மக்கள் மேல்நோக்கிச் சுடுவது, தடிகளை அசைப்பது, தகரக் குவளைகளை அடிப்பது போன்றவற்றைச் செய்து வெட்டுக்கிளிகளை விரட்ட முயற்சித்துவருவதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வெட்டுக்கிளியும் ஒவ்வொரு நாளும் அதன் எடையை ஒத்த உணவை உட்கொள்கிறது. பயிர்களை வெறித்தனமான வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
மூன்று வருட வரட்சியிலிருந்து மெல்ல மீண்டுவந்த அவர்களுக்கு இதன் பாதிப்பில் இருந்து மீள ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்படுகின்றது.
பூச்சிகள் விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடும் என்றும், அவற்றை அழிக்காது விட்டால் அவற்றின் தற்போதைய எண்ணிக்கை ஜூன் மாதத்திற்குள் 500 மடங்கு பெருகக்கூடும் என்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எச்சரித்துள்ளது.
மேலும் உகண்டா மற்றும் தெற்கு சூடானிலும் இந்தவகை வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.