ஈரான் நடத்திய தாக்குதலில் 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளைக்காயங்கள்!
25 Jan,2020
ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 34 அமெரிக்க வீரர்களுக்கு அதிர்ச்சியால் மூளைக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜோனாதன் ஹாஃப்மேன் கூறுகையில், “தாக்குதலில் பாதிக்கப்பட்ட எட்டு இராணுவ வீரர்கள் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒன்பது பேர் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள’
மேலும் 16 பேர் ஈராக்கிலும், ஒருவருக்கு குவைத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 17 பேர் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாகவும்’ கூறினார்.
இரான் இராணுவ ஜெனரல் காசெம் சூலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
எனினும், இந்த தாக்குதலினால் அமெரிக்க வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். எனினும், பின்னர் வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறினார்