கர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு - அமெரிக்கா முடிவு
24 Jan,2020
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்த டிரம்ப், நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றால், குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை எளிதில் கிடைத்துவிடும். இதனால் ரஷியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக வேண்டுமென்றே அமெரிக்காவுக்கு பயணம் செய்து குழந்தை பெற்று கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம், கர்ப்பிணியா என்றும், கருவுறும் திட்டம் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.