ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தியே உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டது: ஈரான்
23 Jan,2020
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தியே உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது.
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரான், அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
இதற்கமைய கடந்த 8ஆம் திகதி உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அந்த விமானத்தின் மீது இரு டார்-எம்1 ரக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வந்தது என ஈரான் பயணிகள் போக்குவரத்து அமைப்பு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த ஏவுகணைகளைக் குறித்து விரிவான விவரத்தை அந்த அமைப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ரஷ்யாவில் தயாரான டார்-எம்1 ரக ஏவுகணைகளைக் கொண்டே உக்ரைன் விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் அந்த ரகத்தைச் சேர்ந்த 29 ஏவுகணைகளை 70 கோடி டொலருக்கு ரஷ்யாவிடமிருந்து ஈரான் கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் இன்டர்நேஷனல் ஏயார்லைன்ஸுக்குச் சொந்தமான பயணிகள் விமானம், விமான நிலையத்துக்கு 45 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது.
இதில், விமானத்திலிருந்த 176 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 82 பேர் ஈரானியர்கள் கனடா நாட்டைச் சேர்ந்த 63 பேர் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவர்.