பதவியேற்று 6 மணி நேரத்தில் அமெரிக்கா மீது தாக்குதல்: பழி வாங்கியே தீருவோம் என புதிய தளபதி அறிவிப்பு
21 Jan,2020
ஈரானின் புதிய குவாட்ஸ் படை தளபதியாக பதவியேற்ற 6 மணி நேரத்தில், தளபதி இஸ்மாயில் குவானி தலைமையிலான இராணுவ படை, ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தி, உலகநாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஈராக் தலைநகர் பக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, ஈரான் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கொல்லப்பட்ட தளபதி சுலேமானீக்கு மிகவும் நெருக்கமானவரான இஸ்மாயில் குவானி, புதிய குவாட்ஸ் படை தளபதியாக பதவி ஏற்று 6 மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இத்தாக்குதல் குறித்து தளபதி இஸ்மாயில் குவானி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் சுலைமானி கொலைக்கு பழி வாங்கி தீருவோம். மிகவும் நேர்மையான முறையில், நேருக்கு நேர் பழி வாங்குவோம். அமெரிக்கா போல மறைந்திருந்து, ஆளில்லா விமான தாக்குதல் நடத்த மாட்டோம்.
அவர்கள் எங்களை கோழைகள் போல தாக்கினார்கள். நாங்கள் சுலைமானி இரத்தத்திற்கு பதிலடி கொடுப்போம். உலகில் இருக்கும் மற்ற நாடுகளின் உதவியுடன் கண்டிப்பாக நாங்கள் மிகப்பெரிய பதிலடியை கொடுப்போம்’ என தெரிவித்துள்ளார்.
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசெம் சுலேமானீயை அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.