மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல’’ : சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆவேசம்
21 Jan,2020
சீனா பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்ததில் இருந்து தேவையற்ற குப்பைகள் கப்பல்கள் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன என்றும், இதனால் மலேசியா மற்றும் வளரும் நாடுகள் அதனை தடுக்க போராடுகின்றன என்றும் அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை மந்திரி இயோ பீ இன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மலேசியா கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் இருந்து 150 கன்டெய்னர் பிளாஸ்டிக் கழிவுகளை 13 முக்கிய பணக்கார நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. 150 கன்டெய்னர்களில் 43 பிரான்சிற்கும், 42 இங்கிலாந்துக்கும், 17 அமெரிக்காவுக்கும், 11 கனடாவுக்கும், 10 ஸ்பெயினுக்கும், மீதமுள்ளவை ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், போர்ச்சுகல், சீனா, வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்ற விரும்புவோர் ‘‘கனவு காணலாம்’’. ஆனால் கழிவுகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும். மேலும் மலேசிய துறைமுகங்களில் இன்னும் 110 கன்டெய்னர் குப்பைகள் உள்ளன. அவை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும்.
மொத்தம் உள்ள 3,737 டன் கழிவுகளை வெற்றிகரமாக திருப்பி அனுப்புவதற்கும், 200-க்கும் மேற்பட்ட சட்டவிரோத பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைகளை அடைப்பதற்கும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ‘‘எங்கள் நிலைப்பாடு மிகவும் உறுதியானது, நாங்கள் கழிவுகளை திருப்பி அனுப்ப விரும்புகிறோம், மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை கொடுக்க விரும்புகிறோம்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.