அமெரிக்கா ஈரான் விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பும் வைரல் வீடியோ
21 Jan,2020
அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு ஆயுதம் ஈரான் ஏவுகணைகளை தாக்குவதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 2.50 நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோவில், வான்வெளியில் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ: "இதனால் தான் ஈரான் ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கவில்லை. இவை அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு தாக்குதல்கள். பார்க்கவே பயங்கரமாக உள்ளது." எனும் தலைப்பில் பகிரப்படுகிறது. இந்த வீடியோ இதே தலைப்பில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வைரலாகியுள்ளது.
வீடியோ காட்சிகளை ஸ்கிரீன்ஷாட் மூலம் இணையத்தில் தேடியபோது, உண்மையில் இது வீடியோ கேம் ஒன்றின் காட்சிகள் என தெரியவந்துள்ளது. போஹெமியா இன்டராக்டிவ் எனும் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தளத்திற்கென 2013-ம் ஆண்டில் உருவாக்கிய ஆர்மா 3 எனும் வீடியோ கேமின் காட்சிகளே சர்ச்சை தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் ஈரானின் ராணுவ தலைவரை அமெரிக்கா கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்களின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதல் சம்பவங்கள் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையிலேயே, வீடியோ கேம் காட்சிகளும் பதற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. வைரல் வீடியோவில் உள்ள காட்சிகள் இரு நாடுகளுக்கிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டன.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன