பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் :
17 Jan,2020
வெளிநாட்டு தலைவர்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘ராய்சினா பேச்சுவார்த்தை 2020’ என்ற கருத்தரங்கம் டெல்லியில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். மேலும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்க்கும் வழிகள் குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டே பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பங்கேற்பவர்களுடன் உங்களால் இணைந்து செயல்பட முடியாது. இப்படி பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை (பாகிஸ்தான்) தூதரக ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாட்டையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளிலும் அது தலைவிரித்தாடுகிறது. இந்த பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்தே ஒழிக்க வேண்டும்.
வழக்கமான போரைப்போல பயங்கரவாதத்தின் எதிர்காலமும் மிகவும் மோசமாக இருக்கும். இதில் மகிழ்ச்சியான முடிவு கிடைக்கும் என நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி இருக்காது. எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் என நாம் நினைத்தால், அது தவறு.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய போரை அறிவித்து அமெரிக்கா பயங்கரவாதிகளை ஒழித்தது. அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை நாமும் மேற்கொண்டால் மட்டுமே பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட முடியும். இதற்கு நாம் பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிக்கும் நாடுகளையும் தனிமைப்படுத்த வேண்டும்.
தீவிரவாதத்தின் தொடக்க நிலையிலேயே அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். ஏனெனில் பள்ளி, கல்லூரிகள், மத தலங்கள் போன்ற இடங்களில் இருந்தே தீவிரவாதம் தொடங்குகிறது. காஷ்மீரில் 10, 12 வயது ஆண், பெண் குழந்தைகளுக்கு இடையே கூட தீவிரவாதம் காணப்படுகிறது. இந்த இளம் குழந்தைகளை தீவிரவாதத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிபின் ராவத், ‘ஆப்கானிஸ்தானில் அனைத்து பிரிவினருடனும் நீங்கள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். தலீபான் உள்ளிட்ட எந்த பிரிவினரும் பயங்கரவாதத்தை கைவிட்டு, அரசியல் மைய நீரோட்டத்தில் இணைய வேண்டும்’ என்று தெரிவித்தார்.