வானில் இருந்து பள்ளியில் கொட்டிய விமான எரிபொருள் : 20 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
15 Jan,2020
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீன நாட்டின் ஷாங்காய் நகருக்கு நேற்று டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 89 புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்திலிருந்து ஜெட் எரிபொருள் கொட்டப்பட்டது. இது அப்பகுதியில் உள்ள 3 பள்ளிகளிலும் மற்றும் சில பகுதிகளிலும் விழுந்தது. இதையடுத்து அப்பள்ளிகளில் உள்ள சில குழந்தைகள் தோல் அரிப்பு மூலம் பாதிக்கப்பட்டனர். இதன் பின்னர் பள்ளி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில் பார்க் அவென்யூவில் உள்ள தொடக்கப்பள்ளியில் 20 குழந்தைகள் மற்றும் 11 பெரியவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என அந்நகர தீயணைப்புத்துறை டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு விமானம் ஜெட் எரிபொருளை கொட்டியதால் 60 பேர் சிகிச்சை பெற்றதாக சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்க எடையை (விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட வடிவமைப்பு எடை) குறைப்பதற்காக அவசர எரிபொருள் வெளியீட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதேபோல் இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்க வேண்டியிருந்தது’, என டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.