மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆத்திரமுட்டும் நடவடிக்கைகளை ஈரான் தொடர்ந்து செய்யும் – அமெரிக்கா
28 Dec,2019
மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆத்திரமுட்டும் நடவடிக்கைகளில் ஈரான் தொடர்ந்து ஈடுபடக்கூடும் என அமெரிக்க கடற்படையின் செயலாளர் தோமஸ் மோட்லி தெரிவித்துள்ளார்.
ஓமன் கடற் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை) சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையிலேயே ஈரானுடன் இணைந்து கூட்டு இராணுவஇ பயிற்சியை சீனா நடத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் நடவடிக்கைகள் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தோமஸ் கூறுகையில், “ ஈரான் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடக் கூடும். அதனைச் செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் ஈரான் பயன்படுத்திக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானியின் ஜப்பான் பயணத்தில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஈரானை உறுதியாக இருக்குமாறு ஜப்பன் பிரதமர் ஷின்சே அபே கேட்டுக் கொண்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பும் விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார்.
இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.