ஓமான் வளைகுடாவில் சீனா ரஸ்யா ஈரான் கடற்படையினர் கூட்டு ஒத்திகை- அமெரிக்காவிற்கு செய்தி?
27 Dec,2019
சீனா ரஸ்யா ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் கடல்வலிமையை வெளிப்படுத்துவதற்கான கூட்டு ஒத்திகையை இன்று ஆரம்பிக்கவுள்ளன.
ஓமான் வளைகுடாவில் இந்த ஒத்திகை ஆரம்பமாகவுள்ளது.
டிசம்பர் 27 ம் திகதி முதல் 30 திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டு ஒத்திகை மூன்று நாடுகளின் கடற்படையினர் மத்தியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது என சீனா தெரிவித்துள்ளது.
சீனா இந்த ஒத்திகையில் தனது கப்பல்களை தாக்ககூடிய தரை தாக்குதல்களிற்கு பயன்படக்கூடிய குறூஸ் ஏவுகணைகளை இந்த கூட்டு ஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இந்த ஏவுகணைகளிற்கு பாதுகாப்பாக ஏவுகணை அழிப்பு நாசகாரியை அனுப்பவுள்ளதாகவும்தெரிவித்துள்ளது.
எனினும் எத்தனை கப்பல்கள் மற்றும் படையினர் ஒத்திகையில் ஈடுபடுத்துவது குறித்த விபரங்களை சீனா வெளியிடவில்லை.
இந்த ஒத்திகை வழமையானது,சர்வதேச சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றிமுன்னெடுக்கப்படுகின்றது என சீனா தெரிவித்துள்ளது.
இந்த ஒத்திகை பிராந்திய நிலைமையுடன் தொடர்புபட்டதல்ல எனவும் சீனா தெரிவித்துள்ளது.
ஈரானுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளதால் பதட்டம் நிலவும் சூழ்நிலையிலேயே இந்த கூட்டு ஒத்திகை இடம்பெறுகின்றது.
யூன் மாதம் இரு எண்ணெய்கப்பல்கள் இனந்தெரியாதவர்களின் தாக்குதலால் சேதமடைந்ததை தொடர்ந்து ஓமான் வளைகுடா பதட்டம்மிகுந்த பகுதியாககாணப்படுகின்ற நிலையிலேயே இந்த ஒத்திகைகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த தாக்குதல்களிற்கு அமெரிக்கா ஈரான் மீது குற்றம்சாட்டியிருந்தது , இதன் பின்னர் பிரிட்டனில் பதிவு செய்யபபட்டஇரு எண்ணெய்கப்பல்களை ஈரான் அந்த பகுதியில் தடுத்து கைப்பற்றியிருந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணையும் ஓமான் வளைகுடாவின் ஊடாகவே கடல்வழியாக எடுத்து செல்லப்படும் கச்சா எண்ணெயின் 30 சதவீதம் கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த கூட்டு ஒத்திகையை அமெரிக்காவும் ஜனாதிபதி டிரம்பும் சீற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கருதலாம் என சிஎன்என் தெரிவித்துள்ளது.