ஜமால் கஷோக்கி வழக்கில் மோசடி: துருக்கி கடும் விமர்சனம்
25 Dec,2019
உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மோசடியானது என துருக்கி விமர்சித்துள்ளது.
குறித்த வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சவுதி நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியன. இதனை அமெரிக்கா உட்பட பல நாடுகள் வரவேற்றன.
எனினும், தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளின் பெயரைக் கூட சவுதி வெளியிடவில்லை துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து துருக்கியின் தகவல் தொடர்புத் துறை இயக்குனர் ஃபஹ்ரெதின் அல்தூன் கூறுகையில், “ஜமால் கொலை வழக்கை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். ஜமால் கொலை வழக்கில் சவுதி வழங்கிய தீர்ப்பு ஒரு மோசடி. உளவுத்துறைக்கான அவமானம்” என்று விமர்சித்துள்ளார்.
சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளரான ஜமால் கஷோக்கி 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியிருந்தார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும் அதன் மன்னர் மற்றும் இளவரசர்களையும் விமர்சித்து ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தார்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்தது என துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது.
மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற வகையில் தான் முழுப் பொறுப்பை ஏற்பதாகவும் ஆனால் ஜமால் கொலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.