மிரட்டும் வடகொரியா அடுத்த கட்டத்துக்கு நகர்வு
22 Dec,2019
வட கொரியாவினுடைய இராணுவ பலத்தினை அதிகரிக்கும் நோக்குடன் வட கோரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், அந்நாட்டு இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா-அமெரிக்கா இடையே மோதல் நிலை மீண்டும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியாவுடன் சமரசம் செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது.
சிங்கப்பூரில் நடந்த வரலாற்று உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலக்கு தங்களிடம் உள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
எனினும் பொருளாதாரத் தடைகளை விலக்கும் வரை அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று வடகொரியா அண்மையில் அறிவித்திருந்தது. அத்துடன் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளையும் வடகொரியா மேற்கொண்டுவருகிறது.
அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்த வடகொரியாவை, அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம், முதல் முறையாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதனால் ட்ரம்பும், கிம் ஜோங் அன்னும் இரண்டாவது முறையாக கடந்த பெப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால் இருநாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை முடங்கிப் போனது.
இந்த சூழலில் யாரும் எதிர்பாரத வகையில் ட்ரம்ப், கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று கிம் ஜோங் அன்னை சந்தித்தார். அப்போது முடங்கிப்போன அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர். இதற்கிடையில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.
இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறி வந்தது.
ஆனால் வடகொரியாவோ, அமெரிக்கா தனது விரோதப்போக்கை மாற்றிக்கொள்ளும் வரை அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என கூறியது. மேலும் குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்கு வடகொரியா காலக்கெடு நிர்ணயித்தது.
அமெரிக்கா அப்படி செய்யாவிட்டால் வடகொரியா புதிய பாதையை கடைபிடிக்கும் என அந்த நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமெரிக்கா இதுவரை மௌனம் காத்துவருகின்றது.
இதேவேளை, வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்காக ரஷ்யா மற்றும் சீனாவின் முயற்சியில் உருவாக்கப்பட்ட வரைவுத் தீர்மானம், சபையின் உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
அதில், வடகொரிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு ஜவுளிப் பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், வட கொரியாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும், இந்த மாதம் 22ஆம் திகதிக்குள் அவர்கள் பணிபுரியும் நாடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவையும் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் அந்த வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் வடகொரியாவுக்கு நன்மை தருவதாக அமைகின்ற நிலையில், ஐ.நா.வின் இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது