துருக்கியில் 609 வருடங்கள் பழைமையான பள்ளிவாசல் கட்டடம் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு நகர்த்தப்பட்டதுVIDEO
19 Dec,2019
துருக்கியில் 609 வருடங்கள் பழைமை வாய்ந்த பள்ளிவாசல் கட்டடமொன்று சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏர் ரிஸ்க் பள்ளிவாசல் துருக்கியின் தென் கிழக்கு பிராந்தியத்திலுள்ள பெட்மென் மாகாணத்தின் ஹசன்கீய்ப் நகரில் உள்ளது.
அப்பகுதியில் தைகிரிஸ் நதியின் குறுக்காக அணைக்கட்டு ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இப்பள்ளிவாசல் நீரில் மூழ்கும் நிலையை எதிர்கொண்டது. இந்நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏர் ரிஸ்க் பள்ளிவாசல் கட்டடத்தை வேறிடத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதன்படி, சுமார் 4.670 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கலாசாரப் பூங்கா ஒன்றுக்கு இப்பள்ளிவாசல் கட்டடம் நகர்த்தப்பட்டது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இப்பள்ளிவாசல் கட்டடத்தின் பிரதான பகுதி பாரிய வாகனமொன்றில் ஏற்றப்பட்டு குறித்த கலாசாரப் பூங்காவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஹசன்கீய்ப் நகரில் சுமார் 6000 குகைகள் உள்ளன.இந்நகரம் 1981 ஆம் ஆண்டு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக் கது.