ஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
12 Dec,2019
உள்நாட்டுப் போர் நடைபெறும் யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதக் கடத்தலுக்கு உதவியதற்காக ஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
அந்தவகையில் ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் எயார் நிறுவனம் மீதும் ஈரானின் கப்பல் நிறுவனம் மீதும் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதிக்கிறது என அமெரிக்க திறைசேரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இதனை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானிய, ரஷ்யா, சீனா ஆகிய 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார்.
இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறமை காரணமாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.