மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது. இப்போது சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும் காணப்படுகிறது. இதனால் மணமகன்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் கிறிஸ்தவ குடும்பங்களைக் குறிவைக்கும் அவர்கள் பெரும் தொகையை கொடுத்து ஏஜெண்ட்கள் மூலம் பெண்களை திருமணம் செய்கின்றனர். இப்படி பல பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்கள் சீன ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்பட்டுள்ளனர். சீனாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என கூறப்படும் பொய்யான கூற்றை கேட்டு பெற்றோர்களும் சம்மதிக்கிறார்கள். அங்கு சென்றதும்தான் சோகம் தொடர்கிறது. பாகிஸ்தானிய பெண்களுக்கு மொழி தெரிவது இல்லை. அவர்கள் அங்கு அடிமைகளை போன்று நடத்தப்படுகிறார்கள். இதுதொடர்பான தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை என்ற கொடுமையும் நிகழ்கிறது. இத்தகைய எல்லை மீறல்களை பாகிஸ்தான் மீது சீனா நடத்தும் மனிதக்கடத்தல் என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் பாகிஸ்தானிய மனித உரிமைகள் ஆர்வலர்கள். பாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள் குறித்த விவரத்தை அசோசியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பரவலாக நடைபெற்றுவரும் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணை குறித்த விவரங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் அதில் சீனாவுக்குக் கடத்தப்பட்டுள்ள 629 பாகிஸ்தான் பெண்களின் பெயர் பட்டியல் உள்ளது எனவும் கூறியிருக்கிறது.
இந்தப் பட்டியலில் இருக்கும் கடத்தப்பட்ட பெண்கள் அனைவரும் சமீபத்தில் திருமணமானவர்கள் எனவும் தெரிகிறது. இவர்கள் எந்த விமான நிலையத்திலிருந்து சென்றார்கள், அவர்களுடைய தேசிய அடையாள எண், கணவர் பெயர் மற்றும் திருமணமான தேதி முதலிய விவரங்களும் கிடைத்துள்ளன.
இந்த பெண்கள் எல்லோருக்கும் 2018 முதல் ஏப்ரல் 2019க்குள் திருமணம் நடத்திருக்கிறது. இவர்களை அவர்களுடைய பெற்றோர் கணவன்மார்களுக்கு திருமணம் என்ற பெயரில் விற்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தப் பெண்களைக் கடத்தியவர்கள் 40 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றனர். காசுக்கு ஆசைப்படும் பெண் வீட்டாருக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார்கள் என கூறினார்.
இந்த விசாரணையில் கிடைக்கும் விவரங்களை வெளியிட்டால் முக்கியமான விஷயங்களில் பாகிஸ்தான் சீனாவுடன் கொண்டிருக்கும் உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அரசு அதிகாரிகளுக்கு இதைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கடத்தல் நெட்வொர்க்குகளைப் பின்தொடரும் மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து விசாரணைகளை கைவிட அரசாங்கம் முயன்றுள்ளது என்று சீனாவில் இருந்து பல இளம் சிறுமிகளை மீட்க பெற்றோருக்கு உதவிய ஆர்வலர் சலீம் இக்பால் என்பவர் கூறி உள்ளார்.
கடத்தப்பட்ட பெண்கள் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள். சீனக் கணவனால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலாளியாக்கப்படுகிறார்கள். பல்வேறு வன்கொடுமைகளில் சிக்கி அவதிப்படும் இத்தகைய பெண்கள் சிலர் அவ்வப்போது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தங்களை மீட்குமாறு கெஞ்சுகின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்துவப் பெண்களே இந்தக் கடத்தலில் குறிவைக்கப்படுகிறார்கள் என சீனாவிலிருந்து தப்பிவந்த வெகுசிலர் ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்