டிக்டாக் செயலி: அமெரிக்கப் பயனர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்குத் தருகிறதா? -
03 Dec,2019
டிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி ரகசியமாகத் தகவல்களை எடுக்கிறது என வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட டிக்டாக் அமெரிக்காவில் நிறையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது.
உலகம் முழுதும் அரை பில்லியன் பயனாளர்களைக் கொண்ட டிக்டாக் செயலி ஏற்கனவே அமெரிக்கத் தகவல்களைச் சீன சர்வர்களில் சேகரித்து வைப்பதை மறுத்துள்ளது.
இந்த செயலியின் தகவல் சேகரிப்பு மற்றும் தணிக்கை முறையைக் கொண்டு வட அமெரிக்காவில் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது.
கலிஃபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டிக்டாக் செயலி ரகசியமாகப் பயனாளர்களின் பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் தனிநபரை அடையாளம் காணும் வகையான தகவல்களைச் சீனாவுக்கு அனுப்புகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அமெரிக்காவில் இருப்பவர்களை இப்போதோ அல்லது பிற்காலத்திலோ அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க உதவலாம் எனக் கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு செய்த மிஸ்டி ஹாங் என்னும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி தான் டிக்டாகை பதிவிறக்கம் செய்ததாகவும் அதில் எந்த கணக்கும் தொடங்கவில்லை என வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய பெயரில் நிறுவனமே கணக்கு தொடங்கியிருந்ததாகவும் தான் பதிவிடாமல் வைத்திருந்த காணொளியை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவல்களை டன்செண்ட் மற்றும் அலிபாபா ஆகிய இரண்டு சீன சர்வர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
``மிகப் பெரிய இலக்குடனும் விளம்பர வருவாய் மற்றும் இலாபங்களை" பெறத் தனியார் தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் டிக்டாக் நியாயமற்ற லாபத்தை ஈட்டுகிறது எனச் சட்டம் வாதிடுகிறது.
மேலும் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான கோரிக்கைகளுக்கு டிக்டாக் உடனடியாக பதிலளிப்பதில்லை.
டிக் டாக் என்றால் என்ன ?
இந்த ஆன்லைன் செயலி சமீப ஆண்டுகளில், மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. அதிலும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த செயலியின் மூலம் பாடல்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு தங்கள் உதடுகளை அசைத்து நடித்து வெறும் 15 வினாடிகளுக்கு மட்டுமே ஒரு காணொளி தயாரித்து சமூக வலைத்தளங்களில் பகிருகின்றனர். அந்த செயலியில் உள்ள அசாதாரண எடிட்டிங் தந்திரங்களையும் பலர் விரும்புகின்றனர்.
டிக் டாக் செயலியின் விரைவான விரிவாக்கத்துடன், பயனர்களின் தனியுரிமையைச் சமரசம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாலேயே அமெரிக்காவில் இந்த செயலி குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
சீனா அரசு டிக் டாக் செயலியைக் கவனிக்கிறார்கள் என்ற குற்றச்சட்டை விசாரித்துத் தீர்க்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிக் டாக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் அரசாங்கத்தின் தலையீட்டால் எந்த காணொளியையும் நீக்கவில்லை என்று டிக் டாக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
மேலும் டிக் டாக் நிறுவனம், இதே போல சீனாவுக்கு ஏற்றவாறு டௌயின் என்ற தனி செயலியை இயக்குகிறது. அமெரிக்கப் பயன்பாட்டாளர்களின் தரவுகளை அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் சேகரித்து வருவதாக டிக் டாக் நிறுவனம் கூறுகிறது.
இருப்பினும் கடந்த வாரம், வீகர் முஸ்லீம்களை சீனா கையாண்ட விதம் குறித்து அமெரிக்க இளைஞர் ஒருவர் பதிவிட்ட காணொளி மிகவும் பெரிய அளவில் பரவியதால், அந்த இளைஞருக்கு டிக் டாக் நிறுவனம் தடை விதித்தது. பிறகு தடையை நீக்கி, அமெரிக்க இளைஞரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு டிக் டாக் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது