யேமனில் சவுதியின் தாக்குதல் நிறுத்தம் – ஐ.நா. தெரிவிப்பு
23 Nov,2019
யேமனில் தாக்குதல் நடத்துவதை சவுதி 80 வீதம் நிறுத்திவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யேமனுக்கான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி மார்ட்டின் கிரிஃபித் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “கடந்த இரு வாரங்களாக யேமனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதை யேமன் கூட்டுப் படைகள் 80 சதவீதம் நிறுத்திவிட்டன.
யேமன் போர் ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாரம் சுமார் 48 மணிநேரம் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தி வைத்தன. யேமனில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நகர்வாகவே இதனைக் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
யேமனில் ஐந்து ஆண்டுகளாக நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர சவுதி மற்றும் யேமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியது. இந்நிலையில் யேமனில் தாக்குதல் நடத்துவதை சவுதி குறைத்துள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான யேமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபித மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவளிக்கிறது. மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு யேமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், யேமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.
யேமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.