பூகன்வில் சுதந்திர தனி நாடு: இந்தத் தீவுக்கூட்டம் உலகின் புதிய நாடாக மாறுமா?
21 Nov,2019
பல தீவுகளின் தொகுப்பாக உள்ள பப்புவா நியூ கினியின் ஓர் அங்கமாக உள்ள பூகன்வில் எனும் தீவுக்கூட்டம் சுதந்திரமான தனி நாடாக வேண்டுமா என்பது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இப்போது பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணமாக பூகன்வில் உள்ளது. சுதந்திரமான தனி நாடாக மக்கள் வாக்களித்தால் இந்த தீவுக்கூட்டம் உலகின் புதிய நாடாகும் வாய்ப்புள்ளது.
சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை மற்றும் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பூகன்வில் தனி நாடாக உருவானால் உலகிலேயே மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக அமையும்.
சனிக்கிழமை தொடங்கவுள்ள கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்கேற்க சுமார் 2,07,000 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நவம்பர் 23 முதல் டிசம்பர் 7 வரை பல கட்டங்களாக இந்த வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதன் முடிவுகள் டிசம்பர் மாத இறுதியில் வெளியாகும்.
நான்கில் மூன்று பங்கினர் தனி நாடாக்க ஆதரவு தெரிவித்தே வாக்களிப்பார்கள் என்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பூகன்வில் – வரலாறு என்ன சொல்கிறது?
பூர்வகுடி மக்கள் வசிக்கும் இந்தத் தீவுக்கு பிரான்ஸ் கடலோடி பூகன்வில் 18ஆம் நூற்றாண்டில் வந்தடைந்தார். அவரது பெயரே இதற்கு சூட்டப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியின் காலனியாதிக்க நாடாக இருந்த ஜெர்மன் நியூ கினியில் அங்கமானது.
முதல் உலகப்போர் சமயத்தில் ஆஸ்திரேலியா இந்தத் தீவுக் கூட்டத்தைக் கைப்பற்றியது. 1975 வரை ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவில், இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் சில காலம் மட்டும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தது.
தனி நாடாக விரும்பும் பிரகடனம்
1975இல் பப்புவா நியூ கினி சுதந்திரம் அடையும் முன்னரே தனி நாடு கோருபவர்களால் ‘வடக்கு சாலமன் தீவுகள் குடியரசு’ என்ற தனி நாட்டை உருவாக்கும் பிரகடனம் வெளியிடப்பட்டது.
எனினும், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினி ஆகிய இரு நாட்டு அரசுகளும் அதை அங்கீகரிக்கவில்லை என்பதால் பூகன்வில் பப்புவா நியூ கினியில் ஒரு மாகாணமானது.
எனினும் இந்தப் பிரகடனம் தனி நாடு கோரிக்கைக்கு முதல் விதையாக அமைந்தது.
மலைகள், இயற்கை வளங்கள், தாமிர மற்றும் தங்கச் சுரங்கங்கள் நிறைந்த இந்தப் பிராந்தியத்தில் இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி 1988இல் உள்நாட்டுப் போர் மூண்டது.
பின்னர் 1997இல் சர்வதேசத் தலையீட்டால் ‘பூகன்வில் அமைதி ஒப்பந்தம்’ மூலம் இந்தப் போர் முடிவுக்கு வந்தது.
எனினும், போர் நடந்த ஒன்பது ஆண்டுகளில் 4,000 முதல் 20,000 பேர் கொல்லப்பட்டனர். இது இந்த மாகாணத்தின் மக்கள்தொகையில் 3% முதல் 13% வரை இருக்கும்.
2005இல் இந்த மாகாணத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
வாக்கெடுப்பு முடிவுகள் எப்படி இருக்கலாம்?
முடிவுகள் மூன்று விதமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
1. கூடுதல் தன்னாட்சி அதிகாரத்துடன் பப்புவா நியூ கினியின் அங்கமாகவே இருக்க மக்கள் வாக்களிக்கலாம்.
2. சுதந்திர தனி நாடாக பூகன்வில் மக்கள் வாக்களித்து அதை பப்புவா நியூ கினி அரசு ஏற்றுக்கொள்ளலாம். அப்போது தனி நாடாக்க நடவடிக்கைகள் தொடங்கும்.
3. . சுதந்திர தனி நாடாக பூகன்வில் மக்கள் வாக்களித்து அதை பப்புவா நியூ கினி அரசு ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அது சிக்கலை அதிகரிக்கும்.
இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு அயர்லாந்து முன்னாள் பிரதமர் பெர்டி ஆகர்ன் தலைமை வகிப்பார். 1998இல் வடக்கு அயர்லாந்தில் அமைதியை நிலைநாட்ட கையெழுத்தான புனித வெள்ளி ஒப்பந்தம் உருவானதில் இவர் முக்கியப் பங்காற்றியவர்.