ஈராக் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு!
16 Nov,2019
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து ஈராக் உள்துறை அமைச்சகம் கூறும்போது, ஈராக்கில் தாஹிர் சதுக்கத்தில் அரசுக்கு எதிரான போரட்டத்தின்போது வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு ஒன்று வெடித்தது.
இந்தக் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசுக்கு எதிராக தாஹிர் சதுக்கத்தில் நடந்த குறித்த போராட்டத்தில் ஈராக்கின் பல்வேறு நகரங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்தி பதவி விலகக் கோரி போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஒரு மாதத்திற்கு மேலாக இடம்பெற்று வரும் இந்த போராட்டத்தில், இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 15,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.