ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு: பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம்!
16 Nov,2019
ஈரானில் பெட்ரோல் விலை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரான் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்களை கலைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொலிஸார், பொதுமக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலையச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இதுகுறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூற எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
இதனால், கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஈரான், மானியம் முறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அந்த அளவுக்கு மேல் வாங்கவேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும். மேலும் இணையதள சேவைகளிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன