பொலிவியா இடைக்கால அதிபராக தன்னைதானே அறிவித்துக்கொண்ட பெண் செனட்டர்
13 Nov,2019
தன்னைதானே இடைக்கால அதிபராக அறிவித்து கொண்ட பெண் செனட்டர் ஜன்னீனே யான்யிஸ்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஏவா மொராலஸ் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அந்நாட்டு செனட் அவையின் எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் ஜன்னீனே யான்யிஸ் தன்னைதானே இடைக்கால அதிபராக அறிவித்துள்ளார்.
மொராலஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமர்வில் இருந்து வெளியேறியிருந்தனர். எனவே, இடைக்கால அதிபராக இந்த பெண் செனட்டரை அங்கீகரிப்பதற்கு போதிய உறுப்பினர்கள் அவையில் இல்லை.
ஆனால், அரசமைப்புச் சட்டப்படி, அதிகார வரிசையில் அடுத்தபடியாக தான் இருப்பதாக கூறியுள்ள ஜன்னீனே யான்யிஸ், விரைவில் தேர்தல் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஆட்சிக்கவிழ்ப்பில் ஆர்வம் கொண்ட வலதுசாரி செனட்டர்” என்று ஜன்னீனே யான்யிசை குறிப்பிட்டுள்ள மொராலஸ், யான்யிசின் இந்த அறிவிப்பை கண்டித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து இருந்ததால், மெக்சிகோவில் அரசியல் தஞ்சம் கோரிய மொராலஸ், அந்நாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.
சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், ஞாயிற்றுக்கிழமை மொராலஸ் பதவியில் இருந்து விலகினார். பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், மேலும் ரத்தம் சிந்தாமல் இருக்கல் தானே பதவி விலகியதாக கூறினார்.
பொலிவியாவின் அதிபராக பதவியேற்ற முதலாவது மண்ணின் மைந்தரான மொராலஸ் பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் படைத்தலைவர் வெளிப்படையாக அறிவித்த பின்னர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக மோராலஸ் அறிவித்தார்.
திங்கள்கிழமையன்று மெக்சிகோ ராணுவ விமானத்தில் பொலிவியாவில் இருந்து மொராலஸ் புறப்பட்டார்.
பெண் செனட்டர் இடைக்கால அதிபரானது எப்படி?
செவ்வாய்கிழமை செனட் அவையின் கட்டுப்பாட்டை தற்காலிகமாக பெற்ற ஜன்னீனே யான்யிஸ் அதிபருக்கு அடுத்து அதிகாரம் பெற்ற வரிசையில் இடம்பெற்றார்.
பலர் பதவி விலகியதை தொடர்ந்து, முன்னாள் செனட் அவையின் துணைத் தலைவரான இவர், இந்த அதிகாரத்தை பெற்றார்.
மொராலசின் சோசலிச இயக்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வில் இல்லாத நிலையில், ஜன்னீனே யான்யிஸ் தன்னைதானே இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்.
“வரலாற்றில் மிக சூழ்ச்சியான, மோசமான, ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டம்” என்று இதனை மொராலஸ் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மொரோலஸின் ஆதரவாளர்கள் லா பாஸில் காவல்துறையினரோடு மோதினர்.
கோக்கோ விவசாயியான மோராலஸ் 2006ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வறுமை ஒழிப்பு, பொலிவியாவின் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளால் இவர் பெரும் புகழ்பெற்றார்.
ஆனால், அரசியல் சாசன விதிகளுகளுக்கு முரணாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு மோராலஸ் போட்டியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
காவல்துறையினரோடு நடைபெற்ற மோதலில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, தன்னை பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்திய "இருண்ட அதிகாரங்களை" எதிர்க்க வேண்டுமென மொராலஸ் தனது ஆதரவாளர்களிடம் வலியுறுத்தியிருந்தார்.
காவல்துறையினரோடு இவரது ஆதரவாளர்கள் மோதி கொண்டதில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது