கருணை தினம்: இரக்க குணம் உடையவரா நீங்கள்? நிச்சயம் உங்கள் ஆயுள் அதிகரிக்கலாம்
13 Nov,2019
நீங்கள் கருணையுடன் நடந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்கள் முகம் பிரகாசமாக தோன்றலாம் அல்லது நீங்கள் திருப்தியாக உணரலாம்ஸஆனால் நீங்கள் கருணையாக இருப்பது இதைக் காட்டிலும் உங்களுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர் அராய்ச்சியாளர்கள்.
ஆம், புதிய ஆய்வு ஒன்று அது உங்கள் வாழ்க்கையை நீட்டிக்கலாம் என்கிறது.
கருணை குறித்த ஒரு கருத்து சமீபத்தில் தலைப்புச் செய்தியானது.
அமெரிக்க அரசியல்வாதியான லிசா க்யூமிங்க்ஸ் கடந்த மாதம் உயிரிழந்த சமயத்தில் அவர் குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா பேசியது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.
"நீங்கள் வலிமையான மனிதர் என்றால் அதில் கருணையும் அடங்கும். நீங்கள் கருணையானவராகவும், இரக்கமானவராகவும் இருப்பதால் நீங்கள் வலிமையற்றவர் என கருத முடியாது." என அவர் தெரிவித்தார்.
எனவே உலக கருணை தினமான இன்று, கருணையாக இருப்பது என்றால் என்ன? அது ஏன் முக்கியம் என்று பார்ப்போம்?
கருணை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பேராசிரியான டேனியல் ஃபெஸ்லர், மக்களை கருணையாக நடந்துகொள்ள வைப்பது எவ்வாறு என்று ஆராய்ந்தார். பெரும்பாலும் அடுத்தவர்கள் கருணையுடன் நடந்து கொள்வதை பார்த்தால் நாமும் கருணையுடன் நடந்துகொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார். தற்போது நாம் ஒரு கருணையற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது துரதிஷ்டவசமானது. அமெரிக்காவிலும் சரி, உலகளவிலும் சரி. பல தரப்பட்ட அரசியல் கருத்துக்கள் உள்ளவர்கள், வேறு வேறு மதங்களை சார்ந்தவர்கள் மத்தியில் மோதல்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்கலாம்," என்கிறார் அவர்.
கருணை என்பது என்ன?
கருணை என்பது, ஒரு எண்ணம், உணர்வு, நம்பிக்கை. அதனால் பிறருக்கும் நமக்கும் நன்மை கிடைக்கிறது.
கருணையில்லாமல் நடந்துகொள்வது என்பது, பிறரின் நலன் குறித்து யோசிக்காமல் இருப்பது. ஒரு நம்பிக்கையற்ற தன்மை அது.
சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளானவர்களுக்கு அதன் அனுபவம் அதிகம் இருக்கும்.
"கருணை என்பது இந்த நவீன உலகத்தில் மிகவும் பற்றாக்குறையான ஒன்றாக உள்ளது," என கருணை குறித்து ஆராய கல்வி நிறுவனம் தொடங்க உதவிபுரிந்த மாத்யூ ஹாரிஸ் தெரிவிக்கிறார்.
"பொதுவாக நன்மை தரக்கூடிய மன அழுத்ததைக் காட்டிலும், எதுவே செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் நம்மை தள்ளக்கூடிய கெட்ட மன அழுத்தம் நாம் அனைவருக்கும் ஆபத்தானது."
நல்ல மன அழுத்தம் என்பது நமக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருக்கும் என்கிறார் டேனியல் ஃபெஸ்லெர்.
"உங்கள் மீது அக்கறையில்லாமலும், விரோதமனப்பான்மையுடனும் இருப்பவருடன் நீங்கள் வாழ்ந்தால் உங்கள் ஆயுள் குறையலாம். ஆனால் அதுவே உங்கள் மீது ஒருவர் கருணையாக உள்ளார். நீங்கள் பிறரிடம் கருணையாக உள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு நன்மை அளிக்கும்." என்கிறார் ஃபெஸ்லெர்.
புன்கையுடன் ஒருவரைப் பார்த்து நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று அக்கறையுடன் கேட்டால் அதுகூட ஒருவரின் மனநிலையை நேர்மறையானதாக மாற்றும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
`உலகிற்கான அவசர செய்தி`
`தி ராபிட் எஃபக்ட்`, என்ற புத்தகத்தின் ஆசிரியர் கெலி ஹார்டிங், "கருணையாக இருப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு நல்லது. அது ஒருவரின் ஆயுளைக் கூட்டும், இதை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டாம். இது எளிமையான ஒன்று," என்று கூறுகிறார்.
அந்த புத்தகத்தின் தலைப்பு குறித்து பேசிய அவர், முயல்கள் குறித்த இந்த ஆய்வை நான் 1970களில் கேள்வி பட்டிருக்கிறேன். மிகவும் இரக்க குணமுடைய ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் இருந்த முயல்கள் அனைத்தும் நன்றாக வளர்ந்தன என அவர் தெரிவித்துள்ளார்."ஒரு மருத்துவராக இந்த உலகத்திற்கு நான் ஒரு அவசர செய்தியை சொல்ல விரும்புகிறேன். அது, கருணையாகவும், இரக்கமுடனும் நடந்து கொள்ளுங்கள் என்பதுதான்." என்கிறார் அவர்.
ஆனால் சில சமயங்களில் பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்வதைக் காட்டிலும் நமக்கு நாமே கருணையுடன் நடந்து கொள்வதுதான் கடினம் என்கிறார் அவர்.
நீங்கள் கருணையுடன் நடந்த கொள்ள என்ன செய்ய வேண்டும்? கருணை குறித்த வல்லுநர் கேப்பியல்லா வான் ரிஜ்சொல்கிறார்:
ஒருவர் சொல்வதை உண்மையாக காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்னரே உங்கள் மூளையில் பதில்களை யோசித்து வைக்காதீர்கள்.
உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், `என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா?` என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறிவிடும்.
பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள்.
நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான விஷயம் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டு சில நிமிடங்கள் பொறுமையாக யோசியுங்கள்.