2 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா
01 Nov,2019
வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரிலும், வியட்நாமிலும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.
முதல் மாநாடு வெற்றி பெற்றாலும், வியட்நாம் மாநாடு பாதியிலேயே முடிந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் இரு தலைவர்களும் கொரிய எல்லையில் சந்தித்து பேசினர். ஆனால் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை கொஞ்சம்கூட விலக்க முடியாது என்று அமெரிக்கா அடம் பிடித்து வருகிறது.
கொஞ்சமாவது அமெரிக்கா விலக்கினால்தான் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் வடகொரியா தெளிவாக இருக்கிறது.
இந்த நிலையில், மறுபடியும் குறுகிய தொலைவுக்கு பறந்து சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ஏவுகணைகளை வடகொரியா சோதித்து வருகிறது. அந்த வகையில் நேற்று அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவி, அந்த நாடு சோதித்தது. இந்த ஏவுகணைகள், ஜப்பான் கடல் என்று அறியப்படுகிற கிழக்கு கடலில் போய் விழுந்தன. அவை தெற்கு பியாங்கான் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரியா கூறுகிறது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள், தென்கொரியாவை அதிர வைத்துள்ளது. சுவீடனில் அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள், அக்டோபர் மாத தொடக்கத்தில் அணு ஆயுத கைவிடல் தொடர்பாக நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது