பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து குர்து படைகளை வெளியேற்றுவது தொடர்பாக துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிரியா எல்லையில் ரஷியா கூடுதல் படைவீரர்களை குவித்துள்ளது.
குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவில் இருந்து வெளியேற அமெரிக்கப் படையினருக்கு அந்த நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, அங்குள்ள குர்து படையினர் மீது துருக்கி தாக்குதல் நடத்தியது.
தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகளை தங்கவைப்பதற்கான பாதுகாப்பு மண்டலத்தை வடக்கு சிரியாவில் உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துருக்கி கூறியது.
இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, துருக்கியுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இருந்து குர்துகள் வெளியேறுவதற்கு வசதியாக, வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புக்கொண்டது.
இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், ரஷியாவுக்கு சென்று சிரியா விவகாரம் குறித்து அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் வடக்கு சிரியா எல்லையில் துருக்கி நிர்ணயித்துள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து குர்து படையினர் 7 நாட்களுக்குள் வெளியேறுவதை உறுதி செய்ய புதின் ஒப்புக்கொண்டார்.
அவ்வாறு அவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக, குர்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க எர்டோகனும் சம்மதித்தார். அந்த வகையில் ரஷியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் போர் நிறுத்தத்தை துருக்கி தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து குர்துக்கள் வெளியேறுவதை உறுதி செய்வதற்காக அங்கு ரஷியா தனது படைகளை குவித்தது.
இந்த நிலையில் ரஷியா- துருக்கி இடையிலான ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து குர்துக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு விரைவில் முடிய இருப்பதால் அந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த ரஷியா, கூடுதலாக 300 ராணுவவீரர்களை சிரியா எல்லைக்கு அனுப்பிவைத்தது.
அவர்கள் அனைவரும் துருக்கியின் எல்லையையொட்டிய சிரியாவில் வடக்கு நகரமான கோபனே நகரை நேற்று சென்றடைந்தனர். குர்து படைகளை பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து வெளியேற்ற அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக களம் இறங்கிய இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக சிரியாவின் வடக்கு பகுதியில் ரஷியா தனது படைகளை குவித்து இருக்கிறது. இது, அமெரிக்க ராணுவம் அங்கிருந்து வெளியேறிய பிறகு ரஷியா தனது செல்வாக்கை குவிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறி அமெரிக்காவும் கூடுதல் படை வீரர்களை குவித்து வருகிறது.
இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கைகளில் எண்ணெய் வயல்கள் மீண்டும் விழுவதை தடுக்க எங்கள் நிலையை வலுப்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.