ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்
22 Oct,2019
ஜப்பானை ஹகிபிஸ் புயல் கடந்த 12 ஆம் தேதி கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், புயல் கரையை கடந்தது. இதனால், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு பசிபிக் பெருகடலில் மையம் கொண்டுள்ள இந்த புயல்களால் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘நியோகுரி’ என பெயரிடப்பட்டுள்ள புயல் டோக்கியோ நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ‘புலாய்’ எனும் புயல் வரும் 26 ம் தேதி இரவு ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு மரியானா தீவுகளில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹகிபிஸ் புயலுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 79 பேர் பலியாகியுள்ளதாகவும் 2,400 வீடுகள் சேதமடைந்ததாகவும் ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு புயல்கள் குறித்த அறிவிப்பு வெளியானது, ஜப்பான் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.