இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்!
19 Oct,2019
இந்தியாவையும் சீனாவையும் இன்னும் வளரும் நாடுகளாக கருதுவதா என உலக வர்த்தக கழகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் அமெரிக்காவை மோசடி செய்து கொள்ளையடிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார்.
உலக வர்த்தக கழகத்தின் வகைப்பாட்டின்படி இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் ஆகும். இந்த வகைப்பாட்டில் வருவதால், வளர்ந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நன்மைகள் உள்ளன.
இந்நிலையில், இந்தியாவையும் சீனாவையும் வளரும் நாடுகளாக கருதக்கூடாது என உலக வர்த்தக கழகத்திற்கு தமது நிர்வாகம் கடிதம் எழுதியிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதால் அவற்றை வளரும் நாடுகளாக தாங்கள் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்புகளை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.
இதேபோல, இந்தியாவிற்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்த டிரம்ப், அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்தியா மிக அதிகமாக வரி விதிப்பதாக தொடர்ந்து குறைகூறி வருவது குறிப்பிடத்தக்கது.