சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில், பிப்ரவரி 2020க்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப். எச்சரித்துள்ளது.
எஃப்.ஏ.டி.எஃப் என்பது நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு. பண மோசடியை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்கவும் ஜி7 அமைப்பு அமைத்த குழு.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனாவின் எஃப்.ஏ.டி.எஃப் தலைவர் சியாங்மின் லியு, “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கும் விவகாரத்தில் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை.
அந்நாட்டின் புதிய அரசாங்கம், சிறிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்திருந்தாலும், சில முக்கிய விஷயங்களில் அவர்கள் கூறியதை செய்யவில்லை.
அவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும். அதையும் வேகமாக செய்ய வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் இருந்து இது தொடர்பாக பாகிஸ்தான், என்ன நடவடிக்கை எடுத்தது என்பது தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை பண மோசடியை கண்காணிக்கும் ஆசிய பசிஃபிக் அமைப்பு வெளியிட்டது.
அந்த அறிக்கையில், “அளிக்கப்பட்ட 40 பரிந்துரைகளில், பாகிஸ்தான் ஒன்றை மட்டுமே முழுமையாக முடித்துள்ளது. ஒன்பது பரிந்துரைகளை ஓரளவிற்கும், 26 பரிந்துரைகளை பாதி செய்து முடித்துள்ளது.
திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத நாடுகளின் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க தேவைப்படும் 4 விஷயங்களை அந்நாடு சுத்தமாக செய்யவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும், இஸ்லாமிய அரசுக்குழு, அல்-கய்தா, ஜமத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெயிஷ்-இ-மொஹமத் போன்ற தீவிரவாத அமைப்புகள் தெரிந்தே நிதி சேகரிக்கின்ற. இதனை கண்டுபிடித்து, அதில் இருக்கும் அபாயங்களையும் பாகிஸ்தான் உணர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2008ஆம் ஆண்டு, 166 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதலுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஜமத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபஸ் சயீத் உள்ளிட்ட பலரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும், அமைப்புகளின் சொத்தை முடக்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் இதனை எப்படி கையாள்கிறது?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு (எப்.ஏ.டி.எப்.) கூட்டத்திற்குப் பிறகு, கடந்த ஆறு மாதங்களாக, தடை செய்யப்பட்ட, சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில் பாகிஸ்தான் மிக முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறது.
இந்த காலக்கட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன், அவற்றில் இருந்த பணமும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில், சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் பாகிஸ்தான் அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று தேசிய பயங்கரவாத ஒழிப்பு ஆணைய (நாக்டா) அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களுடைய சொத்துகளையும் அரசு முடக்கியுள்ளது. அவற்றின் மதிப்பு பல மில்லியன் ரூபாய் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்குப் பணம் கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கத் தவறியதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது.
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எஃப்.ஏ.டி.எஃப். அறிவுறுத்தியது.
பாகிஸ்தான் அரசின் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றிகரமானதாக அல்லது பயன்தரக் கூடியதாக உள்ளன என்று எப்.ஏ.டி.எப். நிபுணர்கள் கருதுகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத பட்டியலில் இருந்து வெளியே வருவதற்கு மற்ற நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டுமானால், சட்டவிரோத அமைப்புகளின் தலைவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தடை செய்யப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பெயரில் இருந்த 5,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டிருப்பதாக, பெயர் வெளியிட விரும்பாத நாக்டா அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பெரும்பாலான கணக்குகள் பஞ்சாப் மாகாணத்தில் முடக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். இந்தக் கணக்குகளில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக இருப்பு இருந்தது என்றும் அவர் கூறினார்.
முடக்கப்பட்ட பெரும்பாலான கணக்குகள், பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் நான்காவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் இருந்தன.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக இருக்கக் கூடிய ஒருவர் பெயரை, அவர் வசிக்கும் மாவட்ட புலனாய்வு கமிட்டி பரிந்துரை செய்தால், நான்காவது அட்டவணையின் பட்டியலில் உள்துறை மூலமாக சேர்க்கப்படலாம் என்பது பாகிஸ்தானின் சட்டமாக உள்ளது.
நான்காவது அட்டவணையில் சேர்க்கப்படும் நபர், மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமான உறுதிமொழி அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழியை அவர் மீறினால், பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது அரசு வழக்கு தொடரலாம்.
வங்கிகள் மற்றும் இதர நிதி அமைப்புகளைப் பொருத்த வரையில், பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதைத் தடுப்பதில் குறிப்பிட்ட அளவுக்கு உதவிகரமாக இருந்து வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினார்.
ஆனால், வெளிநாடுகளில் பல ராணுவத்தினருக்கு எதிராகப் போரிட்டு வரும் அமைப்புகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் சட்ட அமலாக்க ஏஜென்சிகள், குறிப்பாக காவல் துறையின் பயங்கரவாத ஒழிப்புத் துறைகள் சிரமப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
அந்த நபர்கள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு படைகளை எதிர்த்து போரிடுபவர்களாக இருப்பதுடன் மட்டுமின்றி, `உண்டி’/சட்டவிரோத பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்புவது, பாகிஸ்தானில் உள்ள ஒத்த கருத்துள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு கரன்சிகளை கடத்தி வருதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து பணத்தைக் கொண்டு வருவதற்கு, தடை செய்யப்பட்ட அமைப்புகள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு, சட்ட அமலாக்கத் துறைகளின் கண்களில் படாமல் தப்பிவிடுகின்றன.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சாதாரண மக்கள் பணத்தை வாங்கிச் சென்று பட்டுவாடா செய்பவர்களாக பயன்படுத்தப் படுகின்றனர். இது உண்டி செயல்பாடு மூலமாகவும், கடத்தல் மூலமாகவும் நடைபெறுகிறது என்று அந்த அதிகாரி விளக்கினார்.
தீவிரவாதச் செயல்களில் ஒருபோதும் ஈடுபடாத நபரிடம் இருந்து, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் பணம் பெற்றுக் கொள்வார் என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த அவர் தன்னுடைய அமைப்பின் தேவைகளுக்காக அந்தப் பணத்தை செலவு செய்து கொள்வார் என்றும் அதிகாரி கூறினார்.
இதுகுறித்து நாக்டாவுக்கு புலனாய்வு அமைப்புகள் தகவல்கல் அளிக்கின்றன. நிதி கிடைப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ள காரணத்தால், தடை செய்யப்பட்ட சில அமைப்புகளுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சில நேர்வுகளில், பணத் தேவையை சமாளிக்க தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பணம் கேட்டு ஆள் கடத்தல் செய்வதிலும், கார்கள் திருடுவதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாபிலும் ஜே.யு.டி. மற்றும் ஃபலாஹ்-இ-இன்சனியட் (எப்.ஐ.எச்.) எதிராகவும் மிகச் சரியான நேரத்தில், சட்ட அமலாக்கத் துறையினர் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அமைப்புகளின் மத்திய தலைவர்கள் உள்ளிட்ட, ஒரு டஜன் பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஹபீஸ் சய்யீத்
எஃப்.ஏ.டி.எஃப்-ன் ஆசிய பசிபிக் குழுவுக்கு (ஏ.பி.ஜி.) இந்தியா தலைமை வகிக்கிறது என்பதாலும், தடை செய்யப்பட்ட இரு அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஏ.பி.ஜி. கோரியுள்ளது என்பதாலும், இந்த அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரு அமைப்புகளுக்கும் புரவலராக இருக்கும் ஹபீஸ் சய்யீத் மும்பை தாக்குதலுக்கு காரணமானவர் என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த இரு அமைப்புகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை சட்ட அமலாக்க ஏஜென்சிகள் பறிமுதல் செய்துள்ளன. பல தரப்பு மக்களிடம் இருந்து அவர்கள் சேகரித்த இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தச் சொத்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
கீழமை நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் பறிமுதல் உத்தரவு பிறப்பிக்காத வரையில், இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அரசாங்கம் தனது சொத்துகளாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது சட்டமாக உள்ளது.
கடத்தல் தடுப்பு மற்றும் செயல்பாடு முடக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்களை நாக்டா உதாரணம் காட்டியுள்ளது என்று நாக்டாவின் அதிகாரி தெரிவித்தார்.
அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைகள் குறித்து தேசிய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாட்டுச் செலாவணி புழக்கத்தை கருத்தில் கொண்டு, பண மோசடியில் ஈடுபடுவர்களுக்கு மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
லஷ்கர்-இ-ஜாங்வி (எல்.இ.ஜே.) மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதை துரிதப்படுத்துமாறு பஞ்சாப்பில் உள்ள காவல் துறையின் பயங்கரவாத ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று நாக்டா அதிகாரி கூறினார்.
இத்துடன் ஜமாத்-உத்-டாவா (ஜே.யு.டி.), லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி.) அமைப்புகள், ஹபீஸ் சய்யீத் அஹமத், மவுலானா மசூத் அசார் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.
கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த நாக்டா அதிகாரி, தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகளின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து சில நாடுகள் நெருக்கடி தருவதாகத் தெரிவித்தார். இதனால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சட்டங்கள் இடையூறாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகள் மற்றும் அறக்கட்டளை நிதிகளைத் தடுப்பது தான் மிகவும் சிரமமான காரியமாக இருக்கும் என்று நாக்டாவின் முன்னாள் தலைவரான காவஜா பாரூக் கூறுகிறார்.
இம்ரான் கான்
அறக்கட்டளையின் பெயரில் எந்தவொரு வெளிநாட்டில் இருந்தும் பணம் அனுப்புவதை அரசு தடுப்பது மிகவும் சிரமம் என்று அவர் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், நிதி வருவதை ஒழுங்குபடுத்தி, அதை பல்வேறு மதப் பள்ளிகளுக்குப் பயன்படுத்த அரசு முயற்சி செய்து வருவதாகக் கூறினார். ஆனால், இந்த அமைப்புகளுடன் சேர்த்து, மத போதகப் பள்ளிகளும், உண்டி முறையிலும், உள்ளூர் மக்களிடம் இருந்தும் பல்வேறு வகைகளில் நிதி பெறுகின்றன.
தீவிரவாத அல்லது அரசுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் எந்த அமைப்புக்கும் நிதி அளிக்கக் கூடாது என்று மின்னணு ஊடகங்கள் மூலம் முந்தைய அரசு பிரச்சாரம் மேற்கொண்டது என்று காவஜா பாரூக் தெரிவித்தார்.
அந்தப் பிரச்சாரம் யுஎஸ்.எய்ட் அமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஒதுக்கீடு தீர்ந்ததும், பிரச்சாரம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
பண மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதைக் கட்டுப்படுத் தவறியதால், கடந்த ஆண்டு எப்.ஏ.டி.எப். திருப்திகரமான நடவடிக்கை எடுக்காத பட்டியலில் சேர்க்கப்பட்டதில் இருந்து வெளியே வருவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
எஃப்.ஏ.டி.எஃப். கூட்டத்துக்கு முன்னதாக, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆசிய பசிபிக் குழு ஆய்வு செய்தது.
எஃப்.ஏ.டி.எஃப்.-ன் துணை அமைப்பாக ஆசிய பசிபிக் குழு உள்ளது என நினைவுபடுத்துவது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், பண மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஏ.பி.ஜி. உறுப்பு நாடுகளுக்குத் தகவல் அளிக்க வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான அம்சமாக உள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி 2020க்குள் இந்த பிரச்சனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் பிளாக்லிஸ்டில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப்.கூறியுள்ளது