L T T Eயுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் இருவர் உட்பட 7பேர் மலேஷியாவில் கைது!
12 Oct,2019
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தமை தொடர்பில் மலேஷியாவின் அரசியல்வாதிகள் இருவர் உட்பட 7 பேர் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மலேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மலேஷியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் நெகிரி சாம்பிலான் சிரம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உட்பட ரவாங்கைச் சேர்ந்த 28 வயதான வர்த்தகர், 28 வயதா காப்புறுதி முகவர், பேராக் சிப்புட்டைச் சேர்ந்த 37 வயதான டெக்ஸி ஓட்டுநர், கூலிம் கெடாவைச் சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் சுங்கை பூலோவைச் சேர்ந்த 57 வயதான உணவக உரிமையாளர் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் டத்தோ அயூப் கான் நேற்று செய்தியாளார் சந்திப்பில் குறிப்பிட்டார்.
பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினரால் நேற்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏழு பேரும் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவித்தமை, நிதிவழங்கியமை, ஆட்சேர்ப்பு செய்தமை மற்றும் இந்த இயக்கத்துடன் தொடர்புடைய பொருட்களை விநியோகித்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்களில் சட்டமன்ற உறுப்பினர்களான இருவர் கடந்த வருடம் மலாக்காவில் நடந்த விடுதலைப் புலிகள் மாவீரர்கள் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியதுடன் இயக்கத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களையும் விநியோகித்துள்ளதாக நம்பப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் பயங்கரவாத செயல்கள் ஊடுறுவாமல் இருப்பதற்கு மலேஷிய பொலிஸார் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அயுப் கான் மேலும் தெரிவித்தார்