துருக்கிப் பொருளாதாரத்தை அழிப்போம் : ட்ரம்ப் அச்சுறுத்தல்
09 Oct,2019
வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து துருக்கியின் பொருளாதாரத்தை அழிப்போம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், தொடர்ச்சியாக வெளிப்படுத்திவரும் கோபமான கருத்துக்களால் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார். இதனால் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி எல்லைதாண்டிய தாக்குதலைத் தொடங்க வழிவகுக்கும் என்று கருதப்படுகின்றது.
இதேவேளை படையினரை மீளப்பெறும் டிரம்பின் முடிவினை அவரது குடியரசுக் கட்சியினர்கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சிரியாவில் இஸ்லாமிய அரசைத் (ஐ.எஸ்) தோற்கடிக்க அமெரிக்கக் கூட்டணியில் குர்திஷ் படைகள் முக்கிய பங்கினை வகித்திருந்தன.
ஆனால், அமெரிக்காவுடன் இணைந்த சிரிய ஜனநாயகப் படைகளில் (SDF) ஆதிக்கம் செலுத்தும் குர்திஷ் போராளிகளை துருக்கி பயங்கரவாதிகளாகக் கருதுகிறது.
சிரியா முழுவதும் அமெரிக்காவின் சுமார் 1,000 துருப்புக்கள் உள்ளன, ஆனால் சுமார் இரண்டு டசன் படையினர் மட்டுமே சிரிய எல்லைப் பகுதியிலிருந்து மீளப்பெறப்படுவதாக அமெரிக்காவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.