பாகிஸ்தான் பிரதமரை அவமானப்படுத்திய சவுதி இளவரசர்!
09 Oct,2019
சவுதி இளவரசர் தான் வழங்கிய விமானத்தை திரும்ப பெற்று, பாகிஸ்தான் பிரதமரை அவமானப்படுத்தியதாக செய்தி வெளியான நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 74வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வழியில் சவுதி அரேபியா சென்றார். அங்கிருந்து அவர் பயணிகள் விமானத்தில் நியூயார்க் புறப்பட இருந்த நிலையில், அவரை தடுத்து நிறுத்திய சவுதி இளவரசர் முகமது சல்மான், இம்ரான் கானுக்கு தனது சிறப்பு விமானத்தை வழங்கி அனுப்பி வைத்தார்.
பொதுச்சபை கூட்டம் முடிந்து கான் அந்த விமானத்தில் திரும்பியபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி விமானம் மீண்டும் நியூயார்க்கில் தரையிறக்கப்பட்டு, இம்ரான்கான் பயணிகள் விமானத்தில் பாகிஸ்தான் திரும்பினார். இந்தநிலையில்,சவுதி இளவரசர் தான் வழங்கிய விமானத்தை திரும்ப பெற்று, பாகிஸ்தான் பிரதமரை அவமானப்படுத்தியதாக வாராந்திர நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
மேலும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் கான் பங்கேற்றபோது, அவர் துருக்கி அதிபர் ரிசப் டய்யிப் எர்டோகன் மற்றும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ஆகியோருடன் உரையாடியதாகவும், அப்போது அவர்களுடன் இணைந்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த சவுதி இளவசர், இம்ரான் கானை நியூயார்க்கில் விட்டு விட்டு, தனது விமானத்தை திரும்ப அழைத்ததாகவும் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளிதழில் வெளியான இந்த தகவல் புனையப்பட்ட கதை என தெரிவித்துள்ள பாகிஸ்தான், சவுதியுடன் நல்ல உறவு நீடிப்பதாகவும்,அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.