முதல் முறையாக சுற்றுலா விசா வழங்கும் சவூதி அரேபியா!
28 Sep,2019
சவூதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது. தங்கள் நாட்டில் பணிபுரிய வருபவர்கள், அவர்களது குடும்பத்தினர், மெக்கா, மதீனா வரும் ஆன்மீக பயணிகள் ஆகியோருக்கு மட்டுமே சவூதி அரசு விசா வழங்குகிறது.
விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் சவூதி அரசு விசா வழங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது சுற்றுலா விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் என்பதையும் தாண்டி, பன்முகத்தன்மை கொண்டதாக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வை 2030 திட்டத்தின் கீழ், சுற்றுலாத் தொழிலை வளர்த்தெடுப்பது, சவூதி பட்டத்து இளவரசரின் முக்கிய திட்டமாகும்.
இந்நிலையில், 49 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதிக்கு சுற்றுலா வரும் வகையில் அதற்கான விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை தலைவர் அஹ்மத் அல்-ஹத்தீப் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் ஐந்து இடங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்கள் என அறிவிக்கப்பட்டவையாகும்.
இதேபோல இயற்கை அழகு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவை சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாக அமையும் என அவர் கூறியுள்ளார்.
உடலை முழுமையாக மறைக்கும் வகையில் பர்தா போன்ற ஆடை அணிய வேண்டும் என்ற ஆடைக்கட்டுப்பாடு வெளிநாட்டுப் பெண்களுக்கு தளர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டுப் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், அவர்களும் கண்ணியமான ஆடை அணிய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்நாட்டின் ஜிடிபி-யில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை என்பது 3 சதவீதம் மட்டுமே பங்களிக்கும் நிலையில், இதை 2030ஆம் ஆண்டுக்குள் 10 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் சவூதி அரசு சுற்றுலா விசா அறிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள், வருடத்திற்கு 10 கோடி பேர் சுற்றுலாவாசிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ள சவூதி அரசு, இதன் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட 2 வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றம், மது வகைகளுக்கு அனுமதி மறுப்பு மற்றும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக சவூதி அரேபியாவில் சுற்றுலாத் தொழில் களைகட்டுமா என்ற சந்தேகங்கள் உள்ளன. ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் Mohammed bin Salman சமூகக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.