காஷ்மீர் பிரச்சினை : போர் மூளும் அபாயம் உள்ளது – பாகிஸ்தான் எச்சரிக்கை!
26 Sep,2019
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த 50 நாட்களாக காஷ்மீர் மக்கள், 9 இலட்சம் இராணுவ வீரர்களால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள், கூட்டம் கூட்டமாக கைது செய்யப்படுகிறார்கள.வைத்தியசாலைகள் இயங்கவில்லை. செய்திகள் மூடி மறைக்கப்படுகின்றன. 80 இலட்சம் மக்களும் திறந்தவெளி சிறையில் வைக்கப்பட்டு இருப்பது, இந்த காலத்தில் முன் எப்போதும் இல்லாதது ஆகும்.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன நடக்குமோ என்பதுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரு அணு ஆயுத நாடுகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது ” எனக் கூறியுள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்குமாறும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.