போயிங் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒன்றரை லட்சம் டொலர் இழப்பீடு!
25 Sep,2019
கடந்த காலங்களில் போயிங் 737 மெக்ஸ் விமானங்களால் நேர்ந்த உயிரிழப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இரண்டு வெவ்வேறு விமான விபத்துக்களின் போது உயிரிழந்த 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் தயாரிப்பில் உருவான ‘‘போயிங் 737 மெக்ஸ்’’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.
இந்தோனேஷியாவில் நேர்ந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பிய விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். குறித்த இரண்டு விபத்துகளிலும் விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் சர்வதேச ரீதியாக ‘‘போயிங் 737 மெக்ஸ்’’ ரக விமானங்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, விமானத்தின் பாதுகாப்பில் அலட்சியமாக செயற்பட்டதன் விளைவாகவே இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்து போயிங் நிறுவனத்திற்கு எதிராக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன.
1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இரு விபத்துகளில் உயிரிழந்த அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேரின் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பெரும் நிதியை போயிங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் ஒதுக்கியது.
இந்த நிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சத்து 44 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கப்படுமென அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.