கண்கள் மறைக்கப்பட்ட கைகள் பிணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து செல்லும் சீனா பொலிஸார்-VIDEO
24 Sep,2019
கண்கள் மறைக்கப்பட்ட கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை சீனாவின் காவல்துறையினர் அழைத்து செல்வதை காண்பிக்கும் ஆளில்லா விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவொன்று வெளியாகியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யூடியுப்பில் பதிவு செய்துள்ள வீடியோ யுகுர் இனத்தவர்கள் என கருதப்படுபவர்கள் நீல மற்றும் மஞ்சள் ஆடையணிவிக்கப்பட்டு கண்கள் மூடப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதையும் அதன் பின்னர் காவல்துறையினரால் அழைத்துசெல்லப்படுவதையும் காண்பித்துள்ளது.
சீனாவில் சிறைக்கைதிகள் ஒரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்படும் பாணியிலேயே இவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
அச்சத்தின் மீதான பயம் என்ற பெயரில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட வீடியோ குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியர் ஒருவர் சீனாவின் ஜின்ஜியாங் தென்கிழக்கு பகுதியில் உள்ள கொரலா மேற்கே உள்ள புகையிரதநிலையத்தில் குறிப்பிட்ட வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் யுகுர் இனத்தவர்களும் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுகின்றனர் என சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
பல ஆய்வாளர்கள் இந்த வீடியோ உண்மையானது என தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ குறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெயின் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஜின்ஜியாங் மாநிலத்தில் யுகுர் இனத்தவர்களும் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாவது குறித்து பல முறை கவலை வெளியிட்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா யுகுர் இனத்தவர்களையும் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களையும் தடுத்து வைக்கும் நடவடிக்கையை சீனா கைவிடவேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்தும் இதற்கு எதிராக குரல் எழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.