மிகப்பெரிய போர் வெடிக்கும் – ஈரான் எச்சரிக்கை!
20 Sep,2019
தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மிகப்பெரிய போராக வெடிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது குறை கூறி வரும் நாடுகள், தாக்குதல் மிரட்டல் விடுத்து வருகின்றன.
அவ்வாறு எங்கள் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டால் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க மாட்டோம். அந்தத் தாக்குதல் முழுமையான, மிகப் பெரிய போராக வெடிக்கும்’ என கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவின் அப்காய்க் பகுதியிலுள்ள மசகு எண்ணெய் ஆலையிலும், குராயிஸ் பகுதியிலுள்ள எண்ணெய் வயலிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக குறித்த ஆலைகளில் தீப்பிடித்தது.
இந்தத் தாக்குதலுக்கு யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
யேமனில் தங்கள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், அந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.