மூன்றில் ஒரு மேற்குக் கரையை இஸ்ரேலோடு இணைக்க திட்டம்
13 Sep,2019
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மூன்றில் ஒரு பகுதியை இஸ்ரேலோடு இணைக்கும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு அரபு நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
அடுத்த வாரம் இடம்பெறவிருக்கும் இஸ்ரேலிய பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஜோர்தான் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கு சாக்கடலின் மீது இஸ்ரேலின் இறைமையை உறுதி செய்வதாக நெதன்யாகு கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு சவூதி அரேபியா மற்றும் ஜோர்தான் அதிகாரிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இது சட்டவிரோதமானது என்று பலஸ்தீனர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, இது புதிய அமைதி முயற்சிக்கான வாய்ப்பை அழித்துவிடும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
நெதன்யாகுவின் இணைப்புக்கான யோசனை “அமைதிக்கான வாய்ப்பை புதைத்துவிடும்” என்று பலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயெப் எரகத் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் 1967 தொடக்கம் மேற்குக் கரையை ஆக்கிரமித்திருப்பதோடு அதனை இஸ்ரேலுடன் இணைப்பதை முழுமையாக அமுல்படுத்தவில்லை.
இதன் ஒட்டுமொத்த பகுதியும் தமது எதிர்கால சுதந்திர நாட்டுக்குள் உள்ளடங்குவதாக பலஸ்தீனர்கள் உரிமை கோருகின்றனர். மறுபுறம் காதுகாப்பு காரணங்களுக்காக ஜோர்தான் பள்ளத்தாக்கில் இஸ்ரேல் எப்போதும் தனது நிலையை தக்கவைத்துக் கொள்ளும் என்று நெதன்யாகும் இதற்கு முன்னரும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஆலோசிக்கப்படும் ஆட்புல இணைப்பு சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று ஐ.நா பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் வலதுசாரி லகுட் கட்சிக்கும் எதிர்க்கட்சியான மைய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையிலேயே நெதன்யாகு தொலைக்காட்சி உரை ஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
“ஸ்திரமான புதிய அரசு ஒன்று உருவான பின் வடக்கு சாக்கடல் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் இறைமைய உறுதி செய்யும் எனது நோக்கத்தை இன்று நான் கூறுகிறேன்” என்று நெதன்யாகு இதன்போது தெரிவித்தார்.
இஸ்ரேலிய மக்களிடம் இருந்து தெளிவான தீர்ப்பு ஒன்று கடைத்தால் தேர்தலுக்குப் பின் உடனடியாக இது முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
இந்த இணைப்புக்கு இஸ்ரேலுக்கு வரலாற்று சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் இது ஒரு தேர்தல் தந்திரம் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று மேற்குக் கரையில் இருக்கும் அனைத்து யூத குடியேற்றங்களையும் இஸ்ரேலோடு இணைப்பதாகவும் வாக்குறுதி அளித்திருக்கு நெதன்யாகு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற தேர்தலுக்கு முன்னர் நெதன்யாகு முதல் முறை இந்த வாக்குறுதியை அளித்திருந்தார். எனினும் கூட்டணி அரசொன்றை அமைப்பதில் தோல்வி கண்டதை அடுத்தே வரும் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதனிடையே நெதன்யாகுவின் இந்தத் திட்டம் ஒரு ஆபத்தான முன்னேற்றம் என்று 22 நாடுகளைக் கொண்ட அரபு லீக் எச்சரித்துள்ளது.
இது பிராந்தியம் எங்கும் பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டும் என்று ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாதி குறிப்பிட்டுள்ளார்.
நெதயாகுவின் இந்த வாக்குறுதி இனவாதம் கொண்டது என்று சாடியிருக்கும் துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவசொக்லு, தேர்தலுக்கு முன்னர் நெதன்யாகு அனைத்து வகையான சட்டவிரோத, கோபத்தை தூண்டும் செய்திகளை வெளியிட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் மேற்குக் கரையுடன் கிழக்கு ஜெரூசலம், காசா மற்றும் சிரியாவின் கோலன் குன்று பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
1980 இல் கிழக்கு ஜெரூசலத்தையும் 1981 இல் கோலன் குன்றையும் இஸ்ரேல் இணைத்துக்கொண்டபோதும் சர்வதேசம் இதுவரை அதனை அங்கீகரிக்கவில்லை.
இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினையில் மேற்குக் கரை மையப்புள்ளிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு இஸ்ரேல் 140 குடியேற்றங்களை அமைத்துள்ளது.
மூன்று மில்லியன் பலஸ்தீனர்களுக்கு இடையே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் 600,000க்கும் அதிகமான இஸ்ரேலிய யூத குடியேற்றவாசிகள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஜோர்தான் பள்ளத்தாக்கு மேற்குக் கரையின் மூன்றில் ஒரு பகுதியாகும்.
இஸ்ரேலிய அரசியல்வாதிகள் இந்த பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் பற்றி டர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இங்கிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேற்குக் கரையின் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைந்திருக்கும் ‘ஏரியா சி’ என்று அறியப்படும் பகுதியின் அதிகமான இடம் ஜோர்தான் பள்ளத்தாக்கிலேயே அமைந்துள்ளது.
எனும் இந்த இணைப்புத் திட்டத்தில் ஜோர்தான் பள்ளத்தாக்கின் ஜெரிகோ போன்ற பலஸ்தீன நகரங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த நகரங்கள் இஸ்ரேலியே எல்லைகளுக்குள் சிக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோர்தான் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்று இஸ்ரேஸ் தொடர்ந்து கூறி வருகிறது.