முதல் பூச்சி உணவகம்!
07 Sep,2019
தென் ஆப்பிரிக்க சமையல்காரர் ஒருவர், பூச்சி உணவின் ருசியை அறிந்து கொள்ள முயன்று தற்போது பூச்சி உணவு மட்டுமே கொண்ட உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து சென்றிருந்த சமையல்காரர் மரியோ பர்னார்ட், உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார்.
அங்கு கொடுக்கப்பட்ட வறுத்த தேள் மற்றும் மசாலாவுடன் சேர்த்த பூச்சிகளை அருவருப்பால் உண்ணமுடியாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அந்த பூச்சிகளின் சுவை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மரியோவுக்கு அதிகரிக்கவே அது அவரை தென் ஆப்பிரிக்காவில் முதல் பூச்சி உணவகம் ஒன்றை தொடங்கி தூண்டியுள்ளது.
இது குறித்து மரியோ பேசுகையில், இன்செட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பூச்சி உணவகம் உலகம் முழுவதும் பல இடங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் உணவகத்தில் பூச்சியின் லார்வாக்களை பொடியாக மாற்றி பாலுடன் சேர்த்து தயாரிக்கப்படும் ஐஸ்கீரிம் மிகவும் பிரசித்திப் பெற்றது. பூச்சிகள் எந்த உணவை உண்ணுகிறதோ அதே உணவின் சுவை நமக்கு தருவதாகவும் சமையலர் மரியோ பர்னார்ட் கூறுகிறார். தைரியமான வாடிக்கையாளர்கள் புழுக்களையும் பெரிய உலர்ந்த மொபேன் புழுக்களையும் கிண்ணத்தில் வைத்து சுவைக்கலாம் என்றும் கிண்டலாக மரியோ தெரிவிக்கிறார்.
உலகளவில் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் விளைநிலங்களின் அளவு குறைந்து கொண்டே செல்வதால் இந்த பூச்சி உணவே எதிர்கால உணவு தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறுகிறார்.
ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட உண்ணக்கூடிய பூச்சி இனங்கள் உலகில் உள்ளன என்றும் குறைவான பசுமை இல்ல வாயுக்களையும், கால்நடைகளை விட குறைவான அம்மோனியாவையும் இந்த பூச்சிகள் வெளியிடுகின்றன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கிறது.