இரான் கப்பலின் இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் டாலர் தர முன்வந்தது ஏன்?
06 Sep,2019
சர்ச்சைக்குரிய இரான் எண்ணெய்க் கப்பலை, அமெரிக்கா பறிமுதல் செய்வதற்கு வசதியான இடத்துக்கு ஓட்டிவந்தால் பல மில்லியன் டாலர் தருவதாக அந்த கப்பலின் கேப்டனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மின்னஞ்சல் செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையே ஒப்புக்கொண்டது.
அட்ரியன் டர்யா-1 (பழைய பெயர் கிரேஸ் 1) என்ற அந்த இரானிய எண்ணெய்க் கப்பல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அந்தக் கப்பலை ஜூலை 4-ம் தேதி பிரிட்டன் அதிகாரிகள் ஜிப்ரால்டரில் பறிமுதல் செய்து நிறுத்திவைத்தனர்.
கப்பலில் உள்ள எண்ணெய் சிரியாவில் இறக்கப்படமாட்டாது என்று இரான் உறுதி அளித்த பிறகு, ஆகஸ்ட் 15ம் தேதி அந்தக் கப்பலை பிரிட்டன் விடுவித்தது. அந்தக் கப்பலை விடுவிக்கக்கூடாது என்று அமெரிக்கா எடுத்த கடைசி நேர முயற்சி வெற்றிபெறவில்லை.
தற்போது அமெரிக்கா ஒப்புக்கொண்டது என்ன?
அமெரிக்க வெளியுறவுத் துறையின் ‘இரான் நடவடிக்கைக் குழு’வின் தலைவர் பிரையன் ஹூக் கப்பலின் கேப்டனுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.
கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்ய வசதியான இடத்துக்கு ஓட்டிவந்தால் பல மில்லியன் டாலர் தருவதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மின்னஞ்சல் குறித்து பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை புதன்கிழமை செய்தி வெளியிட்டது. பிறகு இதனை அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புக்கொண்டது.
“பல கப்பல்களின் கேப்டன்களையும், கப்பல் நிறுவனங்களையும் அணுக தீவிர முயற்சிகளை” எடுத்துள்ளதாக அந்த துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
அந்த கப்பலை கடந்த வெள்ளிக்கிழமை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா. அந்த கப்பல் 21 லட்சம் பீப்பாய் இரானிய கச்சா எண்ணெயை அந்நாட்டின் புரட்சிகர காவல் படையின் நன்மைக்காக கொண்டு செல்கிறது அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது.
இரான் புரட்சிகர காவல் படை என்பது அந்நாட்டின் ஆயுதப் படைகளின் ஒரு பகுதியாகும். இந்த புரட்சிகரக் காவல் படையை தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது.
யார் அந்த கேப்டன்? அவர் என்ன செய்தார்?
ஃபைனான்சியல் டைம்சில் வெளியான செய்தியின்படி, அட்ரியன் டர்யா-1 கப்பலின் கேப்டன் பெயர் அகிலேஷ் குமார். அவர் ஓர் இந்தியர்.
கப்பலுக்கு எதிராக அமெரிக்கா தடை விதிப்பதற்கு முன்பு அவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்ய தோதான இடத்துக்கு கப்பலை ஓட்டி வந்தால் டிரம்ப் நிர்வாகம் பல மில்லியன் டாலர்களை தர தயாராக இருப்பதாக” தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் பொய்யானது என்று அந்த கேப்டன் சந்தேகப்படலாம் என்பதால் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தொலைபேசி எண்ணும் அந்த மின்னஞ்சலில் தரப்பட்டிருந்தது.
சட்டவிரோத எண்ணெய் ஏற்றுமதியை தடுப்பதற்காக கப்பல்துறை சமூகத்துடன் அமெரிக்க வெளியுறவுத்துறை நெருக்கமாக வேலை செய்துவருவதாக பிரையன் ஹூக் தெரிவித்தார்.
ஆனால், இந்த மின்னஞ்சல்களை அகிலேஷ் குமார் புறக்கணித்துவிட்டார்.
இதையடுத்து அட்ரியன் டர்யா கப்பலை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா, அகிலேஷ் குமாருக்கு எதிராகத் தனிப்பட்டமுறையிலும் தடை விதித்தது.
இது குறித்து குறிப்பிட்ட இரான் வெளியுறவு அமைச்சர் ஜாவாத் ஜாரிஃப் அமெரிக்கா வெளிப்படையாக லஞ்சம் தர முயன்றதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இரான் எண்ணெயை விற்பதற்கு உதவும் இரானிய கப்பல் வலையமைப்பு மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது. அத்துடன் அந்த அமைப்பை சீர்குலைக்கும் எவருக்கும் 15 மில்லியன் டாலர் தரப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இப்போது கப்பல் எங்கே?
சர்ச்சைக்குரிய அட்ரியன் டர்யா-1 கப்பல் தமது சிக்னல் கருவிகளை அணைத்துவைத்திருப்பதாக கூறப்பட்டாலும், கப்பல்கள் இருக்குமிடத்தை அடையாளம் காட்டும் இணைய தளங்கள் அட்ரியன் டர்யா-1 தற்போது மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் கப்பல் ஸ்டெனா இம்பரா
இந்தக் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டபோது பதிலடியாக, ஸ்வீடனுக்கு சொந்தமான, பிரிட்டன் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலான ஸ்டெனா இம்பராவை பாரசீக வளைகுடாவில் இரான் பறிமுதல் செய்தது. இதன் மூலம் ஒரு ராஜீய சிக்கல் உண்டானது.
அந்தக் கப்பலின் 23 சர்வதேசப் பணியாளர்களில் 7 பேரை புதன்கிழமை விடுவித்தது இரான்.
மீதி 16 பணியாளர்கள் தற்போது பண்டர் அப்பாஸ் என்னும் இரானின் தெற்கு துறைமுகத்தில் உள்ள அந்தக் கப்பலில் இருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.