ஈரானிய- பிரிட்டிஷ் நபருக்கு 12 ஆண்டுகள் சிறை
28 Aug,2019
அனுஷே ஆசுரி என்பவர் ஈரான் மற்றும் பிரிட்டன் அரசின் இரட்டைக்குடியுரிமை பெற்ற நபர் ஆவார். இவர் இஸ்ரேல் மொசாட் புலனாய்வு துறைக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இவருக்கு இன்று ஈரான் நீதிமன்றம் உளவு பார்த்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , சட்டவிரோதமாக கற்பிக்கும் பணிகளில் ஈடுபட்ட காரணத்திற்கு 2 ஆண்டுகளும் சிறை தண்டனையும் விதித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டனுக்கு உளவு பார்த்ததாக அராஸ் அமிரி என்ற ஈரானிய பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பிரிட்டிஷ் கவுன்சில் கலாச்சார நிறுவனத்தில் பணிபுரிந்து லண்டனில் வசித்து வந்த அமிரி, 2018 மார்ச் மாதம் தெக்ரானுக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக ஈரானில் பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் யு.எஸ் உட்பட பல இரட்டைக் குடியுரிமைகள் பெற்றுள்ள நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஈரான் இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
பிரிட்டன் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எண்ணெய்க் கப்பல் தொடர்பான பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.