சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம்
20 Aug,2019
சதாம் ஹூசேனின் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவருக்கு பிரித்தானியாவில் அடைக்கலம்
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் காலத்தில் சித்திரவதை முகாமில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு பிரித்தானியா அடைக்கலம் அளித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதாம் ஹூசைனின் சித்திரவதை முகாம் ஒன்றில், மருத்துவராக செயல்பட்ட 54 வயதான MAB என அறியப்படும் ஒருவருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1995 ஆம் ஆண்டு லிபியாவிற்கு குடிபெயர்ந்து அங்கிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியேறினார்.
தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு பிரித்தானியா அரசாங்கத்திடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி சதாமின் சித்திரவதை முகாமில் பணியாற்றியவர் என்ற ஒரே காரணத்தால் அவருக்கு அடைக்கலம் மறுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டடு பற்றி எந்த ஆதாரமும் இல்லை என தீர்ப்பு வழங்கியது.
இருந்த போதும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு துணை போனவர் என்ற ஒரே காரணத்தால் பிரித்தானியா அவருக்கு அடைக்கலம் வழங்குவதை தொடர்ந்து நிராகரிதது வந்துள்ளது.
சதாமின் சித்திரவதை முகாம்களின் கடுமையாக நடத்தப்படும் நபர்களில் சிலருக்கு இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
அவர்களை அங்குள்ள அதிகாரிகள் மீண்டும் சித்திரவதைக்கு உட்படுத்தியும் உள்ளனர்.
இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு குடிவரவு தீர்ப்பாயம் ஒன்றில் தனது நிலைமை குறித்து விளக்கமளித்த குறித்த மருத்துவர், கட்டாயத்தின் பேரிலேயே தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறி, அதில் வெற்றியும் பெற்றார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அப்போதைய உள்விவகாரத்துறை செயலாளர் தெரேசா மே, இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவும், கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்ட கருத்தை ஏற்க மறுத்தது மற்றொரு தீர்ப்பாயம்.
ஆனால் தற்போது மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வானது ஈராக்கிய மருத்துவருக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளதுடன், அவருக்கு அடைக்கலம் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
ஈராக்கிய அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், 1980 முதல் 1990 வரையான பத்தாண்டு காலகட்டத்தில் சதாம் ஹூசைன் ஆட்சியின் கீழ் சுமார் 10 மில்லியன் மக்கள் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.