மூழ்கி வரும் இந்தோனேசிய தலைநகரம்
17 Aug,2019
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா பூமியில் வேகமாக மூழ்கி வரும் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் கடல் நீர்மட்டம் உயர்வதாலும், உலக வெப்பம் அடைவதால் ஏற்படும் தாக்கம் காரணமாகவும், இந்த நகரம் கடலில் மூழ்கும் அபாய கட்டத்தில் உள்ளது.
இதே நிலை நீடித்தால், வருகிற 2050-ம் ஆண்டிற்குள் நகரில் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கி காணமால் போகும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். அங்கு சில கடலோர பகுதிகள் 4 மீட்டர் அளவுக்கு காணாமல் போய்விட்டன. சில கட்டிடங்களின் தரைத்தளமே பூமிக்குள் புதைந்து விட்டன.
இதன் காரணமாக தலைநகரத்தை போர்னியோ தீவுக்கு மாற்றபோவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதவிர இந்த இடர்பாட்டை தவிர்க்க செயற்கை தீவு ஒன்று அமைக்கும் திட்டமும் இருக்கிறது. அதற்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. திட்டச் செலவு பெரிய அளவில் இருப்பதால் அதை நிறைவேற்றுவது தாமதமாகி வருகிறது.