ஈரான் எண்ணெய்க் கப்பலை விடுவிக்க வேண்டாம் : அமெரிக்கா
15 Aug,2019
ஜிப்ரால்டரின் சட்டமா அதிபரால் பரிசீலிக்கப்படும் சுப்பர் ராங்கர் கிரேஸ் 1 (Grace 1) ஐ தடுத்து வைக்குமாறு அமெரிக்க நீதித்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜூலை 4 ஆம் திகதி முதல் ஈரானிய மசகு எண்ணெயைக் கொண்டு செல்லும் கப்பல் இங்கிலாந்து கடற்படையினால் ஜிப்ரால்டரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சுப்பர் ராங்கர் கிரேஸ் 1 ஐ தொடர்ந்தும் தடுத்து வைப்பதற்கு மேலதிக உத்தரவு பிறப்பிக்க மாட்டேன் என்று ஜிப்ரால்டரின் சட்டமா அதிபர் தெரிவித்த சில மணி நேரங்களுக்குள் அமெரிக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த விவகாரம் இன்று மாலை 3 (BST) மணிவரை பிற்போடப்பட்டுள்ளது.
ஈரான் எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்ததைத் தொடர்ந்து பிரிட்டனுக்கும் ஈரானுக்கு இடையில் ராஜதந்திர நெருக்கடிநிலை ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஜூலை 19 ஆம் திகதி பிரிட்டிஷ் கொடியிடப்பட்ட ஸ்வீடனுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் “ஸ்ரெனா இம்பேரோ” ஹோர்மஸ் நீரிணைப்பகுதியில் ஈரானியப் புரட்சிகரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் ஹோர்மஸ் நீரிணைப் பகுதியில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க அமெரிக்கா தலைமையிலான ரோந்துக்குழுவில் இணையப்போவதாக பிரித்தானியா கடந்தவாரம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.