3 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 30 கேபிள் கார்கள் கேபிள் அறுந்து விபத்து!
12 Aug,2019
கனடாவில் சுற்றுலா தளம் ஒன்றில் கேபிள் கார்கள் செல்லும் கேபிள் அறுந்து 30 கார்கள் பல அடி உயரத்தில் இருந்து விழுந்து சேதமடைந்தன.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் வான்கூவர் நகரின் ஹொவே சவுண்ட் பகுதிக்கு அருகே ஸ்குவாஷ்மிஷ் பகுதியில் The Sea to Sky Gondola என்ற கேபிள் கார் மூலம் அந்த பகுதியை சுற்றிப்பார்க்கும் இடம் அமைந்துள்ளது.
3 ஆயிரம் அடி உயரத்தில் கடலின் மேல் செல்லும் அந்த கேபிள் கார்கள் ஒவ்வொன்றிலும் 8 பேர் வரை அமர்ந்து கடல் மற்றும் சுற்றி உள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்கலாம். இந்நிலையில் நேற்று இந்த கேபிள் கார்கள் இணைக்கப்பட்டிருந்த 2 அங்குலம் திடமான கேபிள் அறுந்து 30 கார்கள் கீழே விழுந்து சேதமடைந்தன.
இந்த சம்பவம் நடந்த போது கேபிள் கார் சேவை இயக்கப்படவில்லை என்றும் இதில் யாரும் காயம் அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்குவதற்காக கேபிள் அறுக்கப்பட்டுள்ளது என்று கூறும் போலீசார் அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர்.