8 ஆண்டுகளில் முதன்முறையாக அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்!
11 Aug,2019
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெறும் போராட்டத்தில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறை என சுயாதீன கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியாயமான தேர்தலை நடத்தக்கோரி, ஒரு மாதத்தில் ஐந்தாவது ஆர்ப்பாட்டமாக நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் 60,000 பேர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அடுத்த மாதம் இடம்பெறும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டபோதும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அலுவலகங்களுக்கு வெளியே இடம்பெற்ற போராட்டத்தின்போது பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அந்தவகையில் கடந்த இரண்டு சனிக்கிழமைகளில் அங்கீகரிக்கப்படாத போராட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன்பின்னர் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் அடக்குமுறை அதிகரித்தமை காரணமாக தற்போது போராட்டம் பலமடைந்து வருகின்றது.
இருப்பினும் மொஸ்கோ உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை குறித்து ஜனாதிபதி புடினும் கிரெம்ளினும் இதுவரை கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.