கூடுதல் பாதுகாப்பு நிதி வழங்குவது தென்கொரியாவின் கடமை- அமெரிக்க அதிபர்!
08 Aug,2019
தென்கொரிய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க துருப்புகளுக்கு, கூடுதல் நிதி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் தென் கொரியா நாடுகளாக, கொரிய தீபகற்பம் பிரிந்தது முதல் இரு நாடுகளுக்கிடையே அடிக்கடி போர் மூண்டு வருகிறது. இதனை தவிர்க்கவும், தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் தென்கொரியா, தனது எல்லைகளில் அமெரிக்க ராணுவத்தை குவித்துள்ளது. மேலும் வடகொரியாவுடனான போரை எதிர்கொள்ளவும் அமெரிக்கா ராணுவத்துடன் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், வளம் மிகுந்த தென்கொரிய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
எனவே ராணுவ செலவினங்களுக்கென கூடுதல் பாதுகாப்பு நிதி வழங்குவது தென்கொரியாவின் கடமை எனவும், அதுதொடர்பாக தென்கொரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.