நாயை சுடமுயன்றபோது பெண்ணை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் (VEDIO)
07 Aug,2019
தன்னை நோக்கிப் பாய்ந்த நாய் ஒன்றை சுட முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பெண் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆர்லிங்டன் நகரிலுள்ள பூங்காவொன்றில் கடந்த வியாழக்கிழமை பெண்ணொருவர் மயங்கிக் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரிப்பதற்கு சென்ற அதிகாரி, மேற்படி பெண்ணைக் கண்டார்.
அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகிய காட்சிகளின்படி, அப்பெண்ணிடம் பொலிஸ் உத்தியோகத்தர் நலன் விசாரித்தார்.
தான் நலமாக இருப்பதாக அப்பெண் பதிலளித்தார். அப்போது மேற்படி பெண்ணுக்குச் சொந்தமானது எனக் கருதப்படும் நாயொன்று பொலிஸ் உத்தியோகத்தரை நோக்கி வந்தது.
“இது உங்களுடைய நாயா” என பொலிஸ் உத்தியோகத்தர் கேட்டபோது, நாய் அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது.
அப்போது நாயை நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, அப்பெண்ணின் உடலில் தோட்டா பாய்ந்தது.
இதனால் அப்பெண் உயிரிழந்தார். நாய்க்கும் காயம் ஏற்பட்டது.அவர் 30 வயதான விக்டோரியா மார்கரெட் புரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது 25 வயதான குறித்த பொலிஸ் உத்தியோகத்தரோ அல்லது தமது பொலிஸ் திணைக்களமோ விரும்பிய விடயமல்ல என பொலிஸ் அதிகாரி வில் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.